முள்ளிவளை – நெடுங்கேணி சாலையில் விவசாயிகள் நெல்லைக் கொட்டிக் காயவிடுவதனால் ஏற்பட்ட இடநெருக்கடி காரணமாக இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்தச்சம்பவம் முள்ளிவளை – ஆறாம்கட்டைப் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
முல்லைத்தீவில் இருந்து கடலுணவு வகைகளை ஏற்றிச்சென்ற கூலர்ரக வாகனமும் வவுனியாவில் இருந்துவந்த சிறியரக பாரம் ஏற்றும் ஊர்தியும் நேருக்குநேர் மோதிக்கொண்டன.
இதன்போது இரண்டு ஊர்திகளும் சேதமாகின. எனினும், இதில் பயணம் செய்த சாரதி உள்ளிட்டவர்கள் தெய்வாதீனமாக காயங்களின்றி உயிர்தப்பியுள்ளனர்.
இரவுநேரத்தில் இரண்டு வாகனங்களும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் கடலுணவுகளை ஏற்றிச்சென்ற வாகனத்தில் இருந்த மீன்வகைகள் நாலாபுறமும் சிதறின. மற்றைய வாகனமும் பலத்த சேதமடைந்தது. இந்தச் சம்பவம் குறித்து முள்ளிவளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இது இவ்வாறிருக்க, முள்ளிவளை தெற்கு விவசாயிகளுக்கு நெல்காயவிடுவதுக்கு போதியளவு தளங்கள் இல்லை. இதனால் விவசாயிகள் பலர் தாங்கள் அறுவடைசெய்த நெல்லை ஆறாம்கட்டைப்பகுதியில் உள்ள சாலைகளில் கொட்டிக் காயவிடுகின்றார்கள்.
சாலைகளில் நெல் காயவிட அனுமதி இல்லை. இருந்தபோதும் முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் சாலையில் கூழாமுறிப்புத் தொடக்கம் புளியங்குளம் வரையான பகுதிகளிலும், முள்ளிவளை ஆறாம்கட்டைப் பகுதியிலும், நெடுங்கேணி சாலைகளிலும் விவசாயிகள் நெல்லைக் காயவிடுகின்றார்கள்.
இப்பகுதியில் நெல் காயவிடப்படும் தளங்கள் இருந்தhலும் ஒரேநேரத்தில் பலர் பெருந்தொகையான நெல்லைக் காயவிடமுடியாத நிலை காணப்படுகின்றது. இதனாலேயே விவசாயிகள் சாலைகளை நாடுகின்றனர்.
சில கிராமங்களில் இன்னமும் தளங்கள் அமைத்துக் கொடுக்கப்படவில்லை. முள்ளிவளை ஆறாம் கட்டைப்பகுதியில் சாலையின் ஒருபகுதியில் நெல் காயவிடப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக ஆறாம்கட்டைப் பகுதியில் தொடர்ச்சியான விபத்துகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.