தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவின் பொக் கற்றுக்குள் நான் இருக்கின்றேன் என்று யாழ்ப்பாணத்தில் வைத்து முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார். அவரின்பொக்கற்றுக்குள் நான் இல்லை. என்னைப் பொக்கற்றுக்குள் போட்டுக் கொள்வதற்கு அவர் எப்போதும் முயற்சித்ததில்லை.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். ‘தலைமை அமைச்சர் ரணிலின் பொக்கெட்டுக்குள்ளேயே சம்பந்தன் இருக்கின்றார்’ என்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார். அதற்குப் பதிலடிகொடுக்கும் வகையில்,
திருகோணமலையில் நேற்றுமுன்தினம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.அவர் தெரிவித்தாவது-,
ரணிலின் பொக்கெட்டுக்கள் சம்பந்தன் இருக்கின்றார் என்று யாழ்ப்பாணத்தில் வைத்து கூறியிருக்கின்றார் மகிந்த. ரணில் விக்கிரமசிங்கவை நீண்டகாலமாகத் தெரியும். அவரது மாமனார் ஜே.ஆர்.ஜெயவர்த்தன. அவர் நாட்டின் அரச தலைவராக இருந்தவர். அவர் என்னை தனது பொக்கெட்டுக்குள் போடுவதற்கு முயற்சி செய்தார்.1977ஆம் ஆண்டு தொடக்கம் கடும் முயற்சி எடுத்தவர். அவரால் வெற்றிகாண முடியவில்லை. அது ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தெரியும். இதனால் ரணில் விக்கிரமசிங்க தனது பொக்கெட்டுக்குள் என்னைப் போட்டுக் கொள்வதற்கு எப்போதும் முயற்சித்ததில்லை – என்றார்.