இந்தியாவின் உள்நாட்டுத் தயாரிப்பான தேஜாஸ் விமானத்தில் அமெரிக்க விமானப்படைத் தளபதி ஏர்ஃபோர்ஸ் ஜெனரல் டேவிட் எல்.கோல்ட்ஃபின் பறந்து ஆய்வு செய்தார்.
ராணுவ உறவை மேம்படுத்தும் வகையில் இந்தியாவுக்கு வருகை தந்துள்ள அவர், ராஜஸ்தான் ஜோத்பூரில் உள்ள விமானப்படை மையத்திலிருந்து தேஜாஸ் விமானத்தில் பறந்து சென்றார். தேஜாஸ் விமானத்தில் பறந்த முதல் வெளிநாட்டு விமானப்படைத் தளபதி இவர்தான். இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தின் தயாரிப்பான தேஜாஸ், ஒற்றை இன்ஜீன் கொண்ட இலகுர விமானம். மணிக்கு 2 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கக் கூடியது.
இது குறித்து ஃபேஸ்புக் பதிவில் கருத்துத் தெரிவித்துள்ள டேவிட் எல்.கோல்ட்ஃபின், ” தேஜாஸ் விமானத்தில் பறந்தது எனக்கு மற்றொரு சிறந்த அனுபவமாக இருந்தது. இந்திய விமானப்படைக்கும் அமெரிக்க விமானப்படைக்கும் நல்லுறவு நிலவுகிறது. அமெரிக்கத் தயாரிப்பான குளோப்மாஸ்டர் சி-17 ரக விமானத்தை அதிகளவில் வைத்திருப்பதும் சிறந்த முறையில் பயன்படுத்துவதும் இந்திய விமானப்படைதான். இது குறித்து பெருமிதம் கொள்கிறேன். வருங்காலத்தில் இந்த உறவு இன்னும் நெருக்கமாக வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
குளோப்மாஸ்டர் சி-17 விமானப்படை போக்குவரத்துக்குப் பயன்படுத்தும் மிகப் பெரிய விமானம் / இந்த ரக விமானங்கள் மூலம் டேங்குகளைக் கூட சீனா,. பாகிஸ்தான் எல்லைகளுக்குக் கொண்டு செல்ல முடியும். 7,600 அடி உயரத்தில் சிறிய அளவிலான ரன்வேயில் கூட தரையிறக்கி விட முடியும். ஒரு முறை பெட்ரோல் நிரப்பினால் 4,500 கி.மீ வரை தொடர்ந்து பறக்கக் கூடியது. பறக்கும் போதே பெட்ரோல் நிரப்பிக்கொள்ளலாம். 16 ஆயிரம் பவுண்டு எடை கொண்ட தளவாடங்களை இதில் ஏற்றிச் செல்ல முடியும். இந்தியாவிடம் குளோப்மாஸ்டர் சி-17 ரக விமானங்கள் 10 உள்ளன.