கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற மற்றும் ஆந்திர சட்டமன்ற தேர்தலின்போது ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசமும், பா.ஜனதாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்த கூட்டணிக்கு கணிசமான வெற்றியும் கிடைத்தது.
எனினும், தேர்தலுக்கு பிறகு இரு கட்சிகளுக்கும் இடையேயான உறவு சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஆந்திர மாநிலம் ஆந்திரா, தெலுங்கானா என 2 ஆக பிரிக்கப்பட்ட பிறகு தலைநகர் ஐதராபாத் தெலுங்கானா மாநிலத்துக்கு சென்றுவிட்டது.
இதனால் புதிய தலைநகரை நிர்மாணிக்கவேண்டிய கட்டாயத்துக்கு முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தள்ளப்பட்டார். மேலும் ஆந்திராவுக்கு வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் தனது மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கவேண்டும் என்றும் புதிய தலைநகரான அமராவதிவை கட்டுவதற்கு கூடுதல் நிதி வழங்கவேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் மத்திய அரசு போதிய நிதி அளிக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட 2018-19-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டிலும் ஆந்திராவுக்கு பெரிய அளவில் நிதி எதையும் மத்திய அரசு ஒதுக்கவில்லை. இதனால் சந்திரபாபு நாயுடு பா.ஜனதா அரசு மீது கடும் அதிருப்தி அடைந்து உள்ளார். இதைத்தொடர்ந்து அவர் நேற்று காலை தனது மந்திரி சபை கூட்டத்தை அவசரமாக கூட்டினார். அதில் அவர் மோடி அரசுக்கு எதிராக குரல் கொடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும் நாளையோ(ஞாயிற்றுக்கிழமை) அல்லது அடுத்தவாரமோ சந்திரபாபு நாயுடு கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டத்தை கூட்டி பா.ஜனதா உடனான உறவு தொடர்பாக மறு ஆய்வு செய்வார் என்று தெலுங்கு தேச வட்டாரங்கள் தெரிவித்தன. அப்போது பா.ஜனதாவுடன் உறவை முறிப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திராவில் வலுவான எதிர்க்கட்சியாக திகழும் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தற்போது பா.ஜனதாவுடன் நெருக்கம் காட்டத் தொடங்கி இருக்கிறது. ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பதாக மத்திய அரசு வாக்குறுதி அளித்தால் பாராளுமன்ற தேர்தலில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியுடன் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் இணையத் தயாராக இருக்கிறது என்று ஜெகன்மோகன் ரெட்டி கூறி வருகிறார்.
இதுவும் சந்திரபாபு நாயுடுவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஆந்திர அரசியலில் அதிரடி திருப்பங்கள் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் மத்திய பட்ஜெட்டில் தங்களது மாநிலத்துக்கு சரிவர நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிர சமிதி அரசும் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளது.
“எங்களது மாநிலத்தில் நிறைவேற்றப்படவேண்டிய பல்வேறு திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கவில்லை” என்று மாநில நிதி மந்திரி எடெலா ராஜேந்தர் குற்றம்சாட்டினார்.