இந்தியாவின் இந்த ஆண்டின் பயணத்தைத் தீர்மானிப்பது, மத்திய அரசு அளிக்கும் பட்ஜெட். ‘இன்று என்பது நேற்றின் தொடர்ச்சி’ என்பதுபோல, இந்த ஆண்டில் இந்தியா அடையும் வளர்ச்சியும் தளர்ச்சியும், அடுத்தடுத்த ஆண்டுகளையும் உள்ளடக்கியதுதான். இந்திய மக்களின் சரிபகுதியினர் பெண்கள். அவர்களை உள்ளடக்கிய வளர்ச்சித் திட்டங்களே, இந்தியாவின் முன்னேற்ற பாதையை செம்மைப்படுத்தும். எனில், இந்த ஆண்டு பட்ஜெட்டில் அவர்கள் குறித்து எந்த அளவுக்குக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது?
2018-19 ஆண்டுக்கான பட்ஜெட்டை, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். நாடு முழுவதும் வரவேற்பும் எதிர்ப்பும் வந்த வண்ணமிருக்கின்றன. இந்த பட்ஜெட்டில் பெண்கள் தொடர்பாக அறிவிக்கப்பட்டிருப்பவை பற்றியும் சூடான விவாதம் நடந்துவருகிறது. பணிபுரியும் பெண்களுக்கான மகப்பேறு விடுப்பில், ஊதியத்துடன் விடுமுறை 26 வாரங்களாக அதிகரித்தது, சமூகப் பாதுகாப்புத் திட்டம் வழியான வயதான பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கணவனை இழந்த பெண்களுக்கு உதவி, எட்டு கோடி பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்குவது உள்ளிட்ட அறிவிப்புகள் பலராலும் வரவேற்கப்பட்டுள்ளன.
இந்த பட்ஜெட், நம் நாட்டுப் பெண்களின் பொருளாதார வளர்ச்சிக்கு எந்த அளவுக்கு உதவியாக இருக்கும் என்று, மியூச்சுவல் ஃபண்ட் ஆலோசகர் சித்ரா நாகப்பனிடம் கேட்டோம்.
“பெண்களுக்கு என வேறு அறிவிப்புகள் வந்தபோதிலும், பொருளாதாரம் சார்ந்த மூன்று விஷயங்களை மட்டும் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். ஏனெனில், ஒரு பெண்ணின் பொருளாதார வளர்ச்சி என்பது, அந்தக் குடும்பத்தின் வளர்ச்சியும் அல்லவா?
முதலாவதாக, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 75 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருப்பது. இது, சென்ற வருடத்தைவிடப் பெருமளவு அதிகம். இது, கிராமப்புறப் பெண்களுக்கு நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்தும் என நம்புகிறேன். சுயஉதவிக் குழுமூலம், பெண்களுக்கு எளிதில் கடன் கிடைக்கும். அதன்மூலம் சிறு தொழில்களைத் தடையுமின்றி செய்வதற்கு முன்வருவார்கள்.
இரண்டாவதாக, முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ், பெண்களுக்குக் கடன் வழங்க, மூன்று லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பது. இதன்மூலமாகவும் பெண்கள் தங்கள் சுயதொழிலில் கனவுகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும்.
மூன்றாவதாக, வேலைக்குச் செல்லும் பெண்கள், வைப்பு நிதியில் செலுத்தும் தொகையை 12 சதவிகிதத்திலிருந்து 8 சதவிகிதமாகக் குறைத்திருப்பது. இதனால், அந்தத் தொகை கூடுதலாகப் பெண்களுக்குக் கிடைக்கும். அதை, அவர்கள் சேமிப்பதற்காகப் பயன்படுத்துவது நல்லது. நல்ல திட்டங்கள் வழியே சேமிக்கும்போது, கூடுதலான பணம் கிடைக்கும். இது, அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.
பெண்களின் வளர்ச்சிக்கு இந்த பட்ஜெட்டில் வேறு என்னவெல்லாம் அறிவித்திருக்கலாம் எனக் கேட்டால், அதற்குப் பெரிய பட்டியலே போடலாம். அவற்றில் மிக முக்கியமானதாகக் கருதும் ஒன்றை மட்டும் பார்ப்போம்.
பெண்கள் மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்யும்போது, அவர்களுக்குச் சில விதிவிலக்குகள் அளித்திருக்கலாம். உதாரணமாக, ஒரு பெண் 50,000 ரூபாயை மியுச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்கிறார் என்றால், அந்தத் தொகைக்கு வருமான வரிவிலக்கு அளிப்பது. இதன்மூலம், மார்க்கெட் இன்னும் ஆரோக்கியமாக இருக்கும். மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்வது ரிஸ்க்கான செயல் என்று தோன்றலாம். ஆனால், அதில்தானே ரிட்டன் பெட்டராக இருக்கிறது. ஒருவேளை இது அறிவிக்கப்பட்டிருந்தால், பெண்கள் சேமிப்பின் பக்கம் முழுகவனத்தோடு திரும்பியிருப்பார்கள். ஏனெனில், பெரும்பாலான பெண்கள், வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பது மட்டுமே சேமிப்புக்கான வழியாக நினைத்து வருகிறார்கள். இந்த நிலை நிச்சயம் மாறவேண்டும். ஒரு பெண்ணுக்குச் சேமிப்பின் பயன் முழுமையாகத் தெரிந்துவிட்டால், அவர் வழியாக அடுத்தத் தலைமுறைக்கும் எளிதாக அது சென்றடையும்.”