தமிழீழ விடுதலைப் புலிகள் இப்போது இருந்திருந்தால் அங்கஜன் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஊடாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக எமது மண்ணில் வந்திருக்க மாட்டார்.
இவ்வாறு ரெலோ அமைப்பின் செயலர் ந.சிறிகாந்தா தெரிவித்தார்.
நிரந்தர தீர்வு நோக்கிய பயணத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தல்களின் வகிபாகம் என்ற தொனிப்பொருளில் நீராவியடி இலங்கை வேந்தன் கலைக் கல்லுரி மண்டபத்தில் நேற்று கருத்தாடல் நிகழ்வு நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தெரிவித்ததாவது-சட்டம் தெரியாதவர்களுக்கு சட்டம் சம்பந்தமாக தவறான விளக்கங்களை கொடுத்தால் சட்டத்தரணிகள் கண்டுபிடித்து சரியான விளக்கத்தை கொடுப்பார்கள். ஆனால் தமிழ் மக்களின் சாபக் கேடு, சட்டம் தெரிந்த சிலரே தமது சுயநல அரசியலுக்காகப் பொய்யை கூறிவருகின்றனர்.
தற்போது வெளிவந்துள்ளது இடைகால அறிக்கை மட்டும்தான் என்பதை தெரிந்தும் சிலர் வேண்டுமென்றே பொய்ப் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பந்தன், சுமந்திரனைக் குறிவைத்து ஒரு சில நபர்கள் தாக்குகின்றனர். அவர்கள் மீள அடிக்க ஆரம்பித்தால் நீங்கள் தாங்க மாட்டீர்கள்.
எம்மில் சிலர் கெட்டித்தனமாகக் கூட பொய் சொல்லத் தெரியாதவர்களாக இருக்கின்றனர். இதனால் தான் இப்போது லஞ்ச குற்றச்சாட்டைச் சுமத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
சைக்கிள்கார்கள் தமது பக்கம் கொஞ்ச இளையோரை வைத்துக்கொண்டு தங்கள் பக்கம் இளைஞர் படை இருக்கின்றது என்று கூறிவருகின்றனர். கொஞ்ச இளையோரை ஏமாற்றித் தங்கள் பின்னால் வைத்துள்ளனர். ஆனால் உலகம் தெரிந்த இளையோர், அனுபவசாலிகள், முதியவர்கள் என்று பெரும் கூட்டமே எமது பக்கம் உள்ளது.
மல்லாகம் பகுதியில் அரசியல் தெரியாத பல அப்பாவி சடத்தரணிகள் தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அப்பாவி வேட்பாளர்கள். மிகவும் பாவமானவர்கள். இப்போது பல சின்ன சட்டத்தரணிகள் ஏதோ எல்லாம் கண்டபடி பேசுகின்றனர்.
ஒரு சின்ன சட்டத்தரணி வடமராட்சியில் வைத்து சுமந்திரனை மக்கள் தூக்கி எறிய வேண்டும் என்று கூறியுள்ளார். வடமராட்சி மக்கள் தெரிவு செய்துதான் சுமந்திரனை நாடாளுமன்றுக்கு அனுப்பி வைத்துள்ளனர் என்பதை அவர் அறியவில்லை. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.
ஏனெனில் அவரது காலை இழுத்து வீழ்த்தி விட்டு சின்னச் சட்டத்தரணிகள் அந்த இடத்துக்கு வந்துவிடுவார்கள்.
யாழ்ப்பாணத்தில் இத்தனை காலமாக நாம் தமிழர்களாக ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நிலையில் எம்மை இந்துக்கள், கிறிஸ்தவர்கள் என்று இரண்டாகப் பிரித்து எமது ஒற்றுமையை உடைக்க சிலர் முயற்சி செய்து வருகின்றனர்.
இவ்வாறான புத்தி உள்ளவர்களுக்கு தமிழ்த் தேசியம் பற்றிக் கதைக்க என்ன தகுதி இருக்கின்றது. அவ்வாறானவர்களை மக்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும்.
இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்கும் கஜேந்திரகுமார் ஒரே சின்னத்திலேயே ஒற்றுமையாக இருக்க முடியாமல் சுரேஷூடனும், ஆனந்த சங்கரியுடனும் முட்டி மோதி பிரிந்து உள்ளார். இவர்கள்தானா தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்கப் போகின்றனர்.
தேசியக் கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன், விடுதலைப்புலிகள் இருந்திருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருப்பவர்களை விட்டு வைத்திருக்க மாட்டார் என்று கூறியதாக அறிந்தேன்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இப்போது இருந்திருந்தால் அங்கஜன் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேசியக் கட்சி ஊடாக யாழ்ப்பாண மண்ணில் வந்திருக்க மாட்டார் – என்றார்.
இந்தக் கூட்டத்தில், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயர் வேட்பாளர் இ.ஆனோல்ட் ஆகியோர் உரையாற்றினர்.