தமிழ்நாட்டில் உள்ள பெரிய பாசனத்திட்டங்களில் முக்கியமானது பி.ஏ.பி.என்றழைக்கப்படும் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்டம்.
கோவை,திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 3 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பாசன வசதி பெறுகின்றன.
ஒரே நேரத்தில் 3 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கும் பாசன வசதி கொடுக்க அணைகளில் நீர்வரத்து இல்லாத காரணத்தால், நான்கு மண்டலங்களாக பிரித்து பாசன நீர் பகிர்ந்தளிக்கப்படுகிறது. முதல் மண்டலம், 2-ம் மண்டலம், 3-ம் மண்டலம் மற்றும் 4-ம் மண்டலம் என்று பொதுப்பணித்துறை மூலம் பிரிக்கப்பட்டு தண்ணீர் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் இப்போது முதாலாம் மண்டலத்தில் உள்ள 94 ஆயிரம் ஏக்கர் பாசனத்திற்கான தண்ணீர் திறந்து விடப்பட்டு, காங்கேயம்,வெள்ளக்கோவில் வரையில் இருக்கும் கடைமடைக் கிளை வாய்க்கால்களிலும் தண்ணீர் நிரம்பி ஓடுகிறது.
இந்நிலையில், திருமூர்த்தி அணை தொடங்கி காங்கேயம் வரை ஓடும் பிரதான கால்வாய் தண்ணீரை சிலர் மோட்டார் வைத்து உறிஞ்சி லாரிகளில் கடத்துவதாகவும், குழாய்கள் அமைத்து தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்வதாகவும் புகார் எழுந்தது. குறிப்பாக, நெகமம், செஞ்சேரிமலை, பொங்கலூர் பகுதிகளில் இரவு நேரங்களில் நடக்கும் இந்த தண்ணீர் திருட்டால் கடைமடை பாசன வாய்க்கால்களுக்கு உரிய தண்ணீர் சென்றடைவதில்லை என்கிற குற்றாச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து பிரதான வாய்க்காலில் நடக்கும் தண்ணீர் திருட்டை தடுக்க்கும் விதமாக 5 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பொதுப்பணித்துறை, மின்சார வாரியம், காவல்துறை ஆகிய துறைகள் இணைந்து அமைக்கப்பட்டுள்ள பறக்கும்படை இரவு பகலாக ரோந்து சுற்றி, தண்ணீர் திருட்டை தடுக்கும். மேலும், தண்ணீர் திருட்டை கையும்களவுமாக பிடித்தால், தண்ணீர் திருடப் பயன்படுத்திய வாகனங்கள், மோட்டார்கள் பறிமுதல் செய்யப்படும். சம்பந்தப்பட்ட மின் இணைப்பும் துண்டிக்கப்படும். கூடுதலாக தண்ணீர் திருட்டில் ஈடுபடுவர்களை கைது செய்து வழக்கும் தொடரப்படும் என்று எச்சரிக்கை விடுக்கிறார் பொள்ளாச்சி பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் கலைமாறன்.