இளவாலை, சேந்தாங்குளத்தில் இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று நடந்துள்ளது.
இரு பிள்ளைகளின் தாயான 22வயதுடைய அன்ரன் உதயராஜ் டிலக்சினி என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவரது கணவர் ஒரு பிள்ளையை அழைத்துக் கொண்டு உறவினர் வீடு சென்றுள்ளார். உயிரிழந்தவரின் தங்கை மற்றொரு பிள்ளையை அழைத்துக் கொண்டு தேவாலயம் சென்றுள்ளார்.
தாய் தெல்லிப்பளை மருத்துவமனை சென்றிருந்தார். டிலக்சினி வீட்டில் தனித்திருந்துள்ளார்.
சம்பவம் இடம் பெற்ற தனம் மு.ப.10 மணியளவில் கணவர் வீடு திரும்பினார். அப்போது டிலக்சினி அசைவற்ற நிலையில் இருந்துள்ளார். வீட்டில் இருந்த பொருள்கள் சிதறுண்டு காணப்பட்டன.
ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபா பணமும் காணாமல் போயிருந்தது என்று தெரிவிக்கப்பட்டது.
டிலக்சினி உடனடியாகத் தெல்லிப்பளை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அவர் முன்னரே உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர் என்றும் தெரிவிக்கப்பட்டது. டிலக்சினியின் உடலில் எந்தக் காயமும் காணப்படவில்லை.
இளவாலைப் பொலிஸார் இது தொடர்பில் மல்லாகம் நீதவானுக்கு அறிவித்தனர். மல்லாகம் நீதவான் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டார்.
வீட்டிலிருந்து பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ள நிலையில். கொள்ளையர்களால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.