ஆப்கன் தலைநகர் காபூலில் ராணுவ அகாடமி மீது நேற்று நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 11 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. ஆப்கனில் தொடர்ந்து தீவிரவாத தாக்குதல்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளது.
கடந்த வாரத்தில் காபூலில் உள்ள இன்டர்காண்டினென்டல் ஓட்டலில் வெளிநாட்டு பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 14 வெளிநாட்டினர் உள்பட 22 பேர் கொல்லப்பட்டனர். இதேபோல கடந்த சனிக்கிழமை ஆம்புலன்ஸ் குண்டு தாக்குதலில் 103 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
மேலும் 235 பேர் காயமடைந்தனர்.இந்நிலையில், நேற்று காபூலில் உள்ள ராணுவ அகாடமியை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ள இந்த தாக்குதல் குறித்து ஆப்கன் பாதுகாப்புத் துறையின் செய்தி தொடர்பாளர் தவ்லத் வாசிரி கூறியதாவது:
அதிகாலை 4 மணியளவில் ஆரம்பித்த இந்தத் தாக்குதல் பிற்பகல் வரை நீடித்தது. 5 தீவிரவாதிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டனர். தீவிரவாதிகளின் இந்த தாக்குதல்களில் 11 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.