மக்களுக்கு அடிப்படை தேவையாக உள்ள பொருட்களின் விலை நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றது. சில நாடுகளின் மாதாந்திர செலவு, மற்ற சில நாடுகளின் பல மாதங்களுக்கான செலவாக காணப்படுகின்றது.
இந்நிலையில் உலக அளவில் குறைந்த பொருட்செலவில் வாழ்வதற்கான வசதியுள்ள நாடுகள் எவை என்பது குறித்து கோபேங்கிங்ரேட்ஸ் நிறுவனம் கணக்கெடுப்பு நடத்தியது.
குறைந்த ெசலவில் வாழ தகுதியுள்ள நாடுகள் குறித்து 112 நாடுகளில் சர்வே எடுக்கப்பட்டது. உள்ளூர் கொள்முதல் சக்தி குறியீடு, வாடகை குறியீடு, மளிகை குறியீடு மற்றும் நுகர்வோர் விலை குறியீடு உள்ளிட்ட நான்கின் அடிப்படையில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் மிக குறைந்த செலவில் வாழ்வதற்கு வசதியுள்ள நாடுகள் பட்டியலில் தென்னாப்பிரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது.
நுகர்வோர் பொருட்கள் மற்றும் மளிகை பொருட்களின் விலை குறைவாக உள்ள நாடுகளில் இந்தியாவும் உள்ளது. கொல்கத்தாவில் வாழும் தனிநபர் ஒருவரின் மாதாந்திர செலவினம் சுமார் 16 ஆயிரமாக உள்ளது. இந்தியாவில் 125 கோடி மக்கள் வசிக்கின்றனர். 50 மலிவான நாடுகளில் மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடாக இந்தியா உள்ளது.
ஆய்வு நடத்தப்பட்ட நாடுகளில் மிகவும் அதிக உள்ளூர் வாங்கும் திறன் கொண்ட நாடாக இந்தியா கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவின் உள்ளூர் வாங்கும் திறன் 20.9 சதவீதம் குறைவு, வாடகை 95.2 சதவீதம் மலிவு, மளிகை பொருட்கள் 74.4 சதவீதம் மலிவு, உள்ளூர் பொருட்கள் மற்றும் சேவைகள் 74.9 சதவீதம் மலிவு என கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
இந்தியா அதன் அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவான செலவில் வாழ வசதியுள்ள நாடாக உள்ளது. பாகிஸ்தான் 14வது இடத்திலும், நேபாளம் 28வது இடத்திலும், வங்கதேசம் 40வது இடத்திலும் உள்ளது. மிகவும் குறைவான செலவில் வாழ்வதற்கு ஏற்ற நாடாக பட்டியலில் முதல் இடத்தை தென்னாப்பிரிக்கா பிடித்துள்ளது.
நாட்டிலேயே அதிக அளவில் பிளாட்டினம், தங்கம், குரோமியம் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்கிறது. இதன் காரணமாக நாடு மற்றும் அதன் பொருளாதாரம் சிறந்து விளங்குகிறது.
இதன் காரணமாக அதன் உள்ளூர் வாங்கும் திறன் மிகவும் அதிகமாகும். மிகவும் அதிகமான செலவில் வாழும் நாடாக பெர்முடா உள்ளது. பட்டியலில் 112வது இடத்தை இந்த நாடு பிடித்துள்ளது. பாகாமாஸ் 111, ஹாங்காங் 110, சுவிட்சர்லாந்து 109 மற்றும் கானா 108வது இடத்தில் உள்ளன.