வெளிநாட்டு மீன்பிடி படகுகளுக்கு விதிக்கப்படும் அபராதத்தை, 100 மடங்குக்கு மேல், இலங்கை அரசு உயர்த்தியுள்ளது.
தமிழக மீனவர்கள், கடலில் எல்லை தெரியாமல், இலங்கை பகுதிக்கு சென்று மீன்பிடிப்பது அடிக்கடி நடக்கிறது. இவர்கள் மேல், இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், துப்பாக்கிச் சூடு நடத்துவதும், மீனவர்களை கைது செய்து, படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால், தமிழக மீனவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
இந்நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்து பிடிபடும், வெளிநாட்டு படகுகளுக்கு விதிக்கப்படும் அபராதத்தை, 100 மடங்குக்கு மேல் உயர்த்த, இலங்கை அரசு முடிவு செய்தது. இந்த மசோதாவுக்கு, இலங்கை அமைச்சரவை, சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.இந்நிலையில், இந்த மசோதா, இலங்கை பார்லி மென்டில்,நேற்று நிறைவேற்றப்பட்டது.
இது குறித்து, இலங்கை மீன்வளத்துறை அமைச்சர், மகிந்தா அமரவீரா கூறுகையில், ”இலங்கை மீனவர்களின் நலனை காக்கவே இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு, முன், அதிகபட்சம், 15 லட்சம் இலங்கை ரூபாய் மட்டுமே அபராதமாக விதிக்கப்பட்டது. ”இதை வெளிநாட்டு கப்பல்கள் மிக எளிதாக செலுத்திவிட்டு, மீண்டும் மீண்டும் எல்லை தாண்டி, மீன் பிடிப்பதை தொடர்கின்றனர். அதனால் இப்போது, 60 லட்சம் முதல், 1.75 கோடி இலங்கை ரூபாய் அபராதம் விதிக்க, மசோதா வழிவகை செய்துள்ளது,” என்றார்.
இலங்கை ரூபாயின் இந்திய மதிப்பு, 41 பைசா. இதனால், தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகை, 24 லட்சத்திலிருந்து, 70 லட்ச ரூபாய் வரை, உயர்த்தப்பட்டுள்ளது.