பிப்ரவரி 21-ந் தேதி கட்சி பெயர் பதிவு செய்யப்படும் என்றும் தனது அரசியல் சுற்றுப்பயணத்துக்கு நாளை நமதே என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது” என்றும் நடிகர் கமல்ஹாசன் கூறினார்.
நடிகர் கமல்ஹாசன் இதுகுறித்து கூறியிருப்பதாவது:-
“மக்களை களத்தில் சந்திக்க வரும் பிப்ரவரி 21-ம் தேதி பயணம் கிளம்புகிறேன். இந்த பயணத் திட்டத்துக்கு ஒரு பெயர் வைத்துள்ளோம். நாளை நமதே. ஆம். இந்த பயண திட்டத்துக்கு நாங்கள் வைத்துள்ள பெயர்தான் இது. அவர் ஞாபகம் வந்தாலும் பரவாயில்லை. அவை நல்ல ஞாபகங்கள் என்பதால் இந்த பெயரை வைத்துள்ளோம்.
இன்று யாருடையதாகவோ உள்ள தமிழகத்தை நாளை தமிழர்களுடையதாக மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழக்கூடிய ஒரு பிரதேசமாக மாற்றி காட்டுவதற்கான எங்களின் கனவே இந்த நாளை நமதே.
நாங்கள் என்ன செய்ய விழைகிறோம் என்பதற்கு முன்னுதாரணமாக முதல் கட்டமாக சில கிராமங்களை தத்தெடுக்கவிருக்கிறோம். இந்தியாவின் பலம் கிராமங்களில்தான் இருக்கிறது.
நகரத்தை நோக்கி புலம்பெயர்பவர்கள் எல்லாம் தேவைக்காகத்தான் நகர்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு அந்த தேவைகள் அவர்களை சென்றடையும் பட்சத்தில் அவர்கள் நகரம் நோக்கி நகர மாட்டார்கள். அப்படிப்பட்ட முன்மாதிரி கிராமங்களை நிஜமாகவே உருவாக்கி காட்டுவதற்கான முனைப்புதான் இது.
மாவட்டத்துக்கு ஒன்று, மாநகராட்சிக்கு ஒன்று என்று ஏகப்பட்ட கிராமங்களை தேர்ந்தெடுத்து அகலக்கால் வைக்கப்போவது இல்லை. முதலில் ஒரே ஒரு கிராமம். அதற்காக நாங்கள் போடும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கிறோம்.
விரைவில் ஹார்வர்டு பல்கலை கழகத்துக்கு பயணமாகும் நான் அங்கு பேசப்போவதும் இதைபற்றித்தான். அவர்களை என் தமிழக கிராமங்களை நோக்கி அழைக்கப்போகிறேன். எத்தனை பேர் வருவார்கள் என்று தெரியாது. ஆனால் அந்த உதவி நமக்கு அவசியம். நிச்சயம் ஆர்வத்துடன் வருவார்கள்.
சரி கிராமத்தானுக்கு என்ன வேண்டும்? கல்வியை கிராமங்களுக்கு கொண்டு சேர்க்கும் முன் விதைகளை காமராஜர் போன்றோர் விதைத்து விட்டார்கள். அதை அடுத்த கட்டத்துக்கு வளர்த்தெடுக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. மூத்தோர்கள் அறிவையும் இளைஞர்கள் பலத்தையும் கிராமத்துக்குள் பாய்ச்ச வேண்டும்.
நல்ல குடிநீர் வேண்டும். சுத்தம் சுகாதாரம் வேண்டும். கலைநயம் கொண்ட பொழுதுபோக்கு வேண்டும். நல்ல போக்குவரத்து வேண்டும். நீர்நிலை ஆதாரங்களை மேம்படுத்த வேண்டும். இப்படி அரசாங்கம் செய்யத் தவறியதை நாங்கள் செய்யப்போகிறோம். முதலில் ஒரு கிராமம். அதை மேம்படுத்துவதன் மூலம் கிடைக்கும் அனுபவ பாடத்தைக் கொண்டு அடுத்தடுத்த கிராமங்களில் பணி முடிக்கப்போகிறோம்.
டுவிட்டரில் நான் டுவிட் மழையே பெய்தும் அவர்களுக்கு உறைக்காததால் களம் காண தயாராகி விட்டேன். அதற்கான முயற்சிதான் இந்த நாளை நமதே.”
இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.
மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த நடிகர் கமல்ஹாசன், சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
‘நாளை நமதே’ பெயர் ஏன்?
கேள்வி:- உங்களுடைய சுற்றுப்பயணத்துக்கு ‘நாளை நமதே’ என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறதே? அந்த பெயர் வைத்தது ஏன்?
பதில்:- நான் மக்களை சந்திக்கும் சுற்றுப்பயணத்துக்கு ஒரு பெயர் வைக்க வேண்டும் என கேட்டனர். எனக்கு முதலில் யோசிக்காமல் வந்த பெயர் ‘நாளை நமதே’ என்பதுதான். அது எம்.ஜி.ஆர். பட தலைப்பு ஆயிற்றே என்கிறார்கள். அதில் என்ன தப்பு இருக்கிறது. அவருக்கும் இந்த கனவு இருந்தது. இதை சொல்லும்போது நல்ல ஞாபகங்கள்தான் வருகிறது. அதனால்தான் இந்த பெயர் வைக்கப்பட்டு உள்ளது.
கேள்வி:- பஸ் கட்டண உயர்வு, பெட்ரோல், டீசல் உயர்வு சாதாரண மக்களை பாதிப்பதாக ‘டுவிட்டரில்’ கூறி இருந்தீர்கள். அதுபற்றி..?.
பதில்:- சாதாரண மக்கள் பாதிக்கப்படுவது உண்மை. இதற்கு சில தீர்வுகளை சொல்ல முடியாது. அதை செய்துதான் காட்ட வேண்டும். பக்கத்து மாநிலங்களை பாருங்கள். அவர்களுக்கும் இதே நிலைமைகள் இருந்தது. அதை எப்படி அவர்கள் எதிர்கொண்டார்கள். சமாளித்தார்கள் என்பதற்கு எல்லா முன்னோடி உதாரணங்களும் அங்கே இருக்கின்றன.
தமிழ்த்தாய் வாழ்த்து
கேள்வி:- காஞ்சி மடாதிபதி தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்காமல் தியானத்தில் இருந்ததாகவும், தேசிய கீதம் பாடும்போது எழுந்து நின்றதாலும் சர்ச்சை எழுந்து உள்ளதே?
பதில்:-இதற்காகத்தான் நான் ஏற்கனவே சொன்னேன். கண்ட கண்ட இடத்தில் தமிழ்த்தாய் பாடலை போடாதீர்கள். எல்லோரும் ஒரே மாதிரியாக இருக்க மாட்டார்கள். போட வேண்டிய சரியான இடத்தில்தான் போட வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள். சினிமா தியேட்டரில் கூட தேசிய கீதம் போடும்போது இதுபோன்ற நிகழ்வு நடக்கக்கூடும் என்பதற்காகத்தான் சொன்னேன். நல்ல இடங்களில்தான் போட வேண்டும்.
கேள்வி:-அவர் தியானம் செய்ததாக காஞ்சி மடம் விளக்கம் அளித்திருப்பது பற்றி?
பதில்:- அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தியானத்தில் இருப்பது அவர் கடமை. எழுந்து நிற்க வேண்டியது எனது கடமை.
உள்ளாட்சி தேர்தல்
கேள்வி:- தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் வர இருக்கிறது. இதில் உங்கள் அமைப்பு போட்டியிட வாய்ப்பு இருக்கிறதா?
பதில்:- எங்கள் கட்சியை பதிவு செய்ய வேண்டும். அது பிப்ரவரி மாதம் 21-ந் தேதிதான் நடக்கும். அதன் பிறகு எங்களுக்குள் இருக்கும் கூட்டமைப்பில் பேசிவிட்டுதான் சொல்ல முடியும்.
ஒரே திசைதான்
கேள்வி:- உங்கள் அரசியலும், ரஜினியின் ஆன்மிக அரசியலும் ஒரே திசையை நோக்கி பயணிக்குமா? அல்லது வெவ்வேறு திசையை நோக்கி இருக்குமா?
பதில்:- திசை ஒன்று தான். அது மக்களின் சேவை என்பது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சொல்வார்கள். அதற்கு எனக்கு ஒப்புதல் உண்டா?, எங்களுடைய கோட்பாடுகளுக்கும், கடமைகளுக்கும் இடையூறு இல்லாமல் இருக்குமா? என்பதை கண்டிப்பாக கவனித்தே ஆக வேண்டும்.
கேள்வி:- அரசியல் பிரவேசத்தில் யாரை எதிர்ப்பீர்கள்?
பதில்:- யாரையும் எதிர்க்க வேண்டாம். மக்களுக்கு துணையாக இருப்போம். எதிர்ப்பதற்கு எது வந்தாலும் எதிர்ப்போம்.
கேள்வி:- தமிழகத்தில் உள்ள வலுவான கட்டமைப்பை கமல்ஹாசனால் உடைக்க முடியும் என நினைக்கிறீர்களா?
பதில்:- உடைக்கிறது எல்லாம் எங்கள் வேலை இல்லை. கட்டுறதுதான் எங்கள் வேலை.
இவ்வாறு அவர் கூறினார்.