கிரிக்கெட் வீரர் தோனி, தமிழகத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆராய்ச்சியாளர் ராமச்சந்திரன் நாகசாமி உள்ளிட்டோர் பத்மபூஷண் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
குடியரசுத்தினத்தை முன்னிட்டு கலை, இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி 2017-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் கிரிக்கெட் வீரர் தோனி பத்மபூஷண் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தோனியின் பெயரை இந்தியக் கிரிக்கெட் வாரியம் அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தது. தோனி இந்தியக் கிரிக்கெட் அணிக்கு சிறந்த பங்களிப்பை அளித்திருக்கிறார். அவருடைய தலைமையில் இந்திய அணி 20 ஓவர் மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பைகளை வென்றது. டெஸ்ட் அரங்கிலும் நம்பர் இடத்தைப் பிடித்தது. டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட தோனி தற்போது, கேப்டன் பொறுப்பை கோலியிடம் ஒப்படைத்துவிட்டு ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் விளையாடி வருகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
தமிழகத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆராய்ச்சியாளரும், வரலாற்றாய்வாளருமான ராமச்சந்திரன் நாகசாமி பத்மபூஷண் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழகத்தில் தொல்லியல் துறையை நிறுவியர் ஆவார். பில்லியர்ட்ஸ் வீரர் பங்கஜ் அத்வானி உள்பட மேலும் பலரும் பத்மபூஷண் விருது பெற்றிருக்கிறார்கள்.