கூடங்குளம் அணு உலை வளாகத்தில் குடியரசு தினக் கொண்டாட்டம் உற்சாகத்துடன் நடைபெற்றது. இதில், இந்திய மற்றும் ரஷ்ய விஞ்ஞானிகள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர். அணு உலை வளாக இயக்குநர் சவுத்ரி மூவர்ணக் கொடியை ஏற்றினார்.
குடியரசு தின விழா கொண்டாட்டம் கூடங்குளம் அணு உலை வளாகத்தில் நடைபெற்றது. இதையொட்டி, வளாக இயக்குநர் தீபக்சிங் சவுத்ரி கொடியேற்றினார். முன்னதாக, மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார். இந்த விழாவில் இந்திய விஞ்ஞானிகள் மட்டும் அல்லாமல் ரஷ்ய விஞ்ஞானிகளும் உற்சாகத்துடன் பங்கேற்றனர். அணு உலை வளாக பொதுமேலாளர் அன்புமணி, ரஷ்ய விஞ்ஞானிகள் கூட்டமைப்பின் தலைவர் இவானிச் இவான், தொழில் பாதுகாப்புப்படை காமாண்டர் மணிசிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய கூடங்குளம் அணு உலை வளாக இயக்குநரான தீபக்சிங் சவுத்ரி, ‘’இந்த வளாகத்தில் பணியாற்றும் பணியாளர்கள் அனைவரின் சிறப்பான உழைப்பு மற்றும் ஒத்துழைப்பு காரணமாக இரு அணு உலைகள் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தியைச் செய்து வருகிறது. இரு அணு உலைகளின் மூலமாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு வரையிலும் 22,800 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
தற்போது 3 மற்றும் 4-வது அணு உலைகளுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரியாக்டர்கள் உள்ளிட்ட அனைத்து முக்கியமான கட்டடங்களின் பணிகளும் வேகமாக நடைபெற்று வருவதால் விரைவில் இந்தப் பணிகள் முடிவடையும். கடந்த காலத்தில் 1 மற்றும் 2-வது அணு உலையைக் கட்டும்போது கிடைத்த அனுபவத்தைக் கொண்டு இந்தப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
அணு உலை வளாகத்தைச் சுற்றிலும் வசிக்கும் மக்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறோம். இதுவரை 15 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளைச் செய்துள்ளோம். இது தொடக்கம் மட்டுமே. தொடர்ந்து இது போன்ற பணிகளை அதிகமாகச் செய்திடத் திட்டமிட்டுள்ளோம். கூடங்குளம் அருகே வசிக்கும் மக்களில், வீடு இல்லாதவர்களுக்கு உதவி செய்யும் வகையில் 225 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. மக்களின் ஒத்துழைப்புடன் தொடர்ந்து செயல்படுவோம்’’ என்றார் அக்கறையுடன்.