ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி மன்றத்தில் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக, நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு (எப்.சீ.ஐ.டீ) முறையிட்டுள்ளதாக ஊடகங்களின் மூலம் தெரிந்து கொண்டேன். இந்த நிதி மோசடி தொடர்பில் எப்.சீ.ஐ.டீ என்னை அழைத்தால் அதற்கு முகங்கொடுக்க நான் தயார்.
இந்த மோசடி பொய் என்றால் அவர்களுக்கு எதிராக நான் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
கொட்டகலையில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில், இவ்விடயம் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு விளக்கமளிக்கையில், அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
எந்த நேரத்திலும் எந்தவோர் சந்தர்ப்பத்திலும் எமக்கு எதிராக முன்னெடுக்கப்படும் பிரச்சினைகளுக்கு நாம் அதற்கு ஏற்றாப்போல் முகங்கொடுக்க தயாராகவுள்ளோம்.
தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் நிதி மோசடி என சொல்லிக்கொண்டு இப்பொழுது நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு முறைப்பாடு தெரிவித்துள்ள இவர்கள், கடந்த மூன்று வருட காலப்பகுதியிலும் சரி, கடந்த வருடத்திலும் சரி தூங்கிக்கொண்டு இருந்தார்களா என தொண்டமான் கேள்வியும் எழுப்பினார்.
அத்தோடு எதிர்வரும் தேர்தலில் சேவலுக்கும், வெற்றிலைக்கும் வெற்றி வாய்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில் இத்தேர்தலில் வெற்றியை பெற்றுக்கொள்வதற்காக இந்த கபட நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது என எண்ணுகிறேன்.
ஊவா மாகாணத்தில் தமிழ் கல்வி அமைச்சை ஜனாதிபதியே இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அமைச்சர் செந்தில் தொண்டமானுக்கு வழங்கியுள்ளார்.
இது ஒரு புறத்தில் வெற்றியாக அமைந்துள்ளது. ஆனால் ஊவாவில் தமிழ் ஆசிரியை ஒருவருக்கு நேர்ந்த கதியை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கின்றது.
ஆனால் இத் தமிழ் ஆசிரியை ஒருவருக்கு எதிராக மட்டுல்ல அனைத்து தமிழ் அதிகாரிகளுக்கும் இவ்வாறான ஒரு நிலையை எவர் உருவாக்கினாலும் அதை இ.தொ.கா வன்மையாக கண்டிக்கும்.
ஊவா தமிழ் கல்வி அமைச்சு செந்தில் தொண்டமானிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இது தமிழ் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய வாய்ப்பாக அமைந்திருந்தாலும், அதை சிலர் கீரியிடமிருந்து நரியிடம் கொடுத்துவிட்டார்கள என வர்ணிக்கின்றனர். இதை வர்ணிப்பவர்களும் ஒரு மிருகத்தை சேர்ந்தவர் தான் என அவர் மேலும் தெரிவித்தார் .