திருடர்களுக்கும் மோசடிக்காரர்களுக் கும் எதிராக நடவடிக்கை எடுப்பதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தடையாக இருக்கின்றார். அதனால்தான் ஜனாதிபதி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க ஒத்துழைக்குமாறு கேட்கின்றார் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.
தேசிய ஐக்கிய முன்னணி நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்துக்கு வரும்போது மக்களுக்கு பல வாக்குறுதிகளை அளித்திருந்தது. அதில் முக்கியமாக கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளுடன் தொடர்புபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தது. ஆனால் அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்து 3வருடங்கள் கடந்தும் கடந்த காலத்தில் ஊழல் மோசடிகளில் தொடர்பு பட்டவர்கள் என பகிரங்கமாக தெரிவிக்கப்படுபவர்களுக்கு எதிராக இதுவரை எந்த சட்ட நடவடிக்கையையும் எடுக்க தவறியுள்ளது.
அத்துடன் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் பல மோசடிகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக இரட்டை கடவுச்சீட்டு விவகாரத்தில் விமல் வீரவன்ச கைதுசெய்யப்பட்டபோது, பிரதமரின் தலையீட்டால் அவர் விடுவிக்கப்பட்டார். அதேபோன்று ஐக்கிய தேசிய கட்சியினர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கட்சி தலைமையகத்தில் வைத்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டபோது மஹிந்த ராஜபக் ஷ அவரை பாதுகாத்தார். அதற்கு பிரதி உபகாரமாகவே பிரதமர் ரணில் விக்ரமசிங்க ராஜபக் ஷ குடும்பத்துக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பாதுகாத்து வருகின்றார்.
பிரதமரின் இந்த நடவடிக்கையினாலே கடந்த அரசாங்க காலத்தில் ஊழல் மோசடிகளில் தொடர்பு பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாமல் போயுள்ளது. இதனால் அரசாங்கத்தின் மீது மக்களுக்கு விரக்தி ஏற்பட்டுள்ளது. அத்துடன் ஊழல் மோசடிகளை துடைத்தெறிவதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்து சில மாதங்களிலே மத்திய வங்கியில் மோசடி இடம்பெற்றுள்ளது. இதுவும் அரசாங்கத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதுடன் குற்றவாளிகளை பாதுகாக்கும் வகையில் பிரதமர் செயற்படுவதாகவும் பகிரங்கமாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான நடவடிக்கைகளை கருத்திற்கொண்டே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஊழல்வாதிகளுக்கு எதிராக சட்ட ரீதியில் தண்டனை பெற்றுக்கொடுக்கும் செயற்பாட்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என பகிரங்கமாக தெரிவித்துள்ளார். எனவே ஜனாதிபதியின் இந்த கோரிக்கையானது திருடர்களை பிரதமர் பாதுகாக்கின்றாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.