பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலத்தின் அதிபர் ஆர்.பவானியை அச்சுறுத்தி முழங்காலிடவைத்த சம்பவம் தொடர்பில், கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி பற்றி துறைசார் மேற்பார்வைக் குழு முன்னிலையில், நேற்று (23) விசாரணைகள் நடைபெற்றன.
நாடாளுமன்றத்தில் நேற்று (23) பிற்பகல் 1:30க்கு ஆரம்பமான அந்த விசாரணைகள், சுமார் இரண்டு மணிநேரம் இடம்பெற்றன. அந்தக் குழு அறைக்குள் ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படாத போதும், அதிபர், தேம்பித் தேம்பியழுது சாட்சியளித்தமையைக் காணக்கூடிதாக இருந்தது.
அவர் சாட்சியமளிப்பது, கண்ணாடிகளுக்கு வெளியே தெட்டத்தெளிவாகத் தெரிந்தது. அழுகுரலும் கேட்டது. ஒருகணத்தில், உணர்ச்சிவசப்பட்டு, தேம்பியழுந்து கண்ணீர் மல்கிய அதிபர், “முதலமைச்சருக்குத் தெளிவுபடுத்திப் பார்த்தேன், அவர் கேட்கவில்லை. முடியாத குறைக்குத்தான் காலில் விழுந்தேன். அந்த நேரம், செத்துவிடலாம் போலிருந்தது” என்றார்.
இதனியே, ஊடகவியாளர் வெளியே நின்றுகொண்டிருந்போது, அமைச்சர் திகாம்பரம் அந்த அறையிலிருந்து வெளியேறினார். அவருடைய கண்களில் கண்ணீர் குளம் கட்டியிருந்தது. “நுவரெலியா மாவட்டத்தில் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெறுவதற்கு இடமளிக்கமாட்டேன். எங்களுடைய அதிபர், ஆசிரியர்களிடத்தில் ஒற்றுமையில்லை. சில அரசியல்வாதிகள் தங்களுடைய பெயருக்காக அரசியல் செய்கின்றனர். அதைத்தான் தமிழ்பத்திரிகைகளை தூக்கிப்பிடித்துக்கொண்டு அறிக்கையிடுகின்றன.
“மலையக மக்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுப்பதற்கும் ஒன்றுமே செய்தவர்கள், எங்களுடன் மல்லுகட்டிக் கொண்டிருக்கின்றனர் என்று, நுவரெலியாவுக்கு ஜனாதிபதி வந்ததும் நன்றாகச் சொல்வேன்” கூறியதுடன், “அதிபர் கண்ணீர் மல்கியதைப் பார்த்ததும், எனக்கும் கண்ணீர் கலங்கிவிட்டது” என்றுகூறி கண்களை துடைத்துக்கொண்டு அவ்விடத்திலிருந்து அகன்று சென்றுவிட்டார்.
விசாரணையின் பின்னர், ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய வடிவேல் சுரேஷ் எம்.பி, “மலையகத்தைச் சேர்ந்த சகல எம்.பிக்களும் ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்தித்து, இந்த விவகாரம் தொடர்பில், எமது நிலைப்பாடுகள் குறித்து அறிவிப்பதற்கும் நடவடிக்கையெடுத்துள்ளோம்.
“பதுளையில் முதலமைச்சரால், பாடசாலை அதிபர் ஒருவரை முழங்காலிட வைக்கப்பட்ட சம்பவத்தை, ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி பற்றி துறைசார் மேற்பார்வை குழு முன்னிலையில் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. முதலமைச்சர், தனது உத்தியோகபூர்வ இல்லத்துக்கு அழைத்து இவ்வாறு நடந்துக்கொண்டுள்ளார்.
“இதேவேளை, இந்த விவகாரம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு எனது எம்.பி பதவிதான் பிரச்சினையென்றால், அதனையும் தூக்கியெறிந்து விட்டு, நானும் ஆசிரியர்களுடன் இணைந்து போராடுவேன். இதன்படி, மலையகத்தைச் சேர்ந்த சகல எம்.பிக்களும் பதவிகளைத் துறந்து வெளியேறி செல்வோம்” என்றார்.