கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பரிசோதனையின் போது
பதினாறு தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு எதிராக தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண பிரதான நடமாடும் பரிசோதகர் ஏ.ஆர்.எம்.பாரூக் தெரிவித்தார்.
இலங்கை போக்குவரத்து சபை பேருந்திற்கும் தனியார் பேருந்துகளுக்குமிடையில் ஏற்பட்ட பயணத்திற்கான நேர முரண்பாடுகளை முகாமைத்துவப்படுத்தும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.
கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் திரு.உதயகுமாரின் பணிப்புரையின் பேரில் இந்த சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் திருகோணமலையிலிருந்து புறப்படும் கல்முனை அம்பாறை பகுதிகளுக்கு செல்லும் தனியார் பேருந்துகள் அனைத்தும் பரிசோதிக்கப்பட்டதாகவும் கிழக்கு மாகாண பிரதான நடமாடும் பரிசோதகர் ஏ.ஆர்.எம்.பாரூக் குறிப்பிட்டார்.
இதேவேளை அனுமதிப்பத்திரமின்றி தனியார் பேருந்துகள்
திருகோணமலையிலிருந்து தங்கல்லைக்கு செல்வதாக பஸ் உரிமையாளர்களினால் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து அனுமதிப்பத்திரமில்லாமல் பயணித்த தனியார் பேருந்து உரிமையாளருக்கு எதிராக திருகோணமலை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் முன்னாள் கிழக்கு மாகாண பெண் அமைச்சரொருவரின் பேருந்தே அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.