திருமணத்தைவிட காதலில் மிகப்பெரிய நேர்மை தேவைப்படுகிறது. சடங்கு, சம்பிரதாயம், தாலி, கல்யாண மோதிரம், உற்றார் உறவினர், ஊர் உலகம், பிறக்கும் குழந்தைகள், குடும்ப மானம் என ஒரு திருமணத்தை காப்பாற்ற ஆயிரத்தெட்டு விஷயங்கள் இருக்கின்றன. நாடுகள், கலாசாரங்கள் பொறுத்து இவற்றில் சில மாறுபடுமே ஒழிய, இல்லாமல் போவதில்லை. ஆனால், காதலைப் பொறுத்தவரை, அது சொந்தப் பந்தங்களுக்குத் தெரியாத களவு வாழ்க்கை. அதில் சம்பந்தப்பட்ட இருவருமே அதிகபட்ச நேர்மையுடன் நடந்துகொள்ள வேண்டும். அப்படித்தான் 32 வருடங்களாக இணைபிரியாமல் வாழ்ந்துவருகிறார்கள் உலகப் புகழ் மீடியா, செலிபிரெட்டி ஒஃப்ரா வின்ஃபிரே மற்றும் அவர் காதலர் ஸ்டெட்மென் கிரெயம். இந்த 32 வருடங்கள் என்பது, இன்றைய காலகட்டத்தில் சட்டப்படியோ, சம்பிரதாயப்படியோ இணைந்த தம்பதிகளின் தாம்பத்திய காலத்தைவிட அதிகமானது என்பதைக் கவனியுங்கள். எவ்வளவு காதலான முரண் இது.
1986-ம் வருடம் ஒஃப்ரா வின்ஃபிரேவின் டாக் ஷோ அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகத் தொடங்குகிறது. ஒஃப்ராவின் பேச்சும், நிகழ்ச்சியை நடத்தும் விதமும் அந்த டாக் ஷோவையும் ஒஃப்ராவையும் புகழின் உச்சத்துக்கு கொண்டுசெல்கிறது. இந்த விஷயங்கள் நாமெல்லாம் அறிந்தவைதான். அறியாத ஒரு இன்ட்ரஸ்ட்டிங்கான விஷயம், இதே 1986-ம் ஆண்டில்தான் ஒஃப்ராவும் ஸ்டெட்மென்னும் தொண்டு நிறுவன விழாவில் சந்தித்துக்கொண்டார்கள்.
முதலில் நண்பர்கள், பிறகு காதலர்கள் என்று இவர்களின் உறவு வளர்ந்துகொண்டே சென்றது. மறுபக்கம் ஒஃப்ரா மீடியா துறையில் புகழ், இன்னும் புகழ், மேலும் புகழ் என சரசரவென ஏறிக்கொண்டிருந்தார். அதுவரை ஒஃப்ரா மனதை காதலுடன் கொண்டாடிய ஸ்டெட்மென், பிறகு ஒஃப்ராவின் திறமைகளையும் கொண்டாட ஆரம்பித்தார். இத்தனைக்கும் ஸ்டெட்மென், மீடியாத் துறை பற்றி அறியாதவர். அவருடைய துறை மேனேஜ்மென்ட்டும் மார்க்கெட்டிங்கும். ஒரே துறையில் வேலை பார்ப்பவர்கள்தான் ஒருவரை ஒருவர் நன்குப் புரிந்துகொள்வார்கள் என்ற கருத்தை, இவர்களின் காதல் கடந்த கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக அடித்து நொறுக்கி வருகிறது.
ஒஃப்ராவும் காதலில் சோடைபோனவர் இல்லை. தன் புகழின் கனத்தைத் தலையிலும் ஏற்றிக்கொள்ளாமல், ஸ்டெட்மென் மனதிலும் ஏற்றாமல் இருக்கிறார். பேட்டி ஒன்றில், “அவளுடைய காதலைத் தாண்டி அவளுடைய புகழ் என்னைப் பயமுறுத்தியதே இல்லை” என்று தன் இணையின் காதலுக்கு சர்ட்டிஃபிகேட் தருகிறார் ஸ்டேட்மென்.
1992-ம் ஆண்டு இந்த ஜோடி, நிச்சயதார்த்தம் செய்துகொண்டார்கள். திருமணத்தை மட்டும் இதுவரை தள்ளிப்போட்டுக்கொண்டே வந்திருக்கிறார்கள். இதுபற்றி பேட்டி ஒன்றில், ”ஒருவேளை திருமணம் நடந்திருந்தால் நாங்கள் பிரிந்திருக்கலாம். எங்கள் காதலில் பிரிவே கிடையாது” என்கிறார் ஒஃப்ரா. ஸ்டெட்மென்னோ, ”அவள் சந்தோஷமாக இருக்க நான் உதவுகிறேன். நான் சந்தோஷமாக இருக்க அவள் உதவுகிறாள்” என்று காதலின் இன்னொரு பக்கத்தை காட்டுகிறார்.
சில நாட்களுக்கு முன்னால் கோல்டன் குளோப் விருது விழாவில், ஒஃப்ரா விருதொன்றைப் பெற்ற சமயத்தில்கூட, பார்வையாளராக அமர்ந்திருந்த ஸ்டெட்மென், உற்சாகமிகுதியில் பூரித்த சிரிப்புடன் கைத்தட்டியது, அவர்களின் ஈகோ இல்லாத காதலுக்கு சாட்சி… 2020-ம் ஆண்டு நடக்கப்போகும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் களம் இறங்கப்போவதாக அறிவித்துள்ள ஒஃப்ராவுக்கு, இப்போதே தன் சப்போர்ட்டைத் தெரித்துவிட்டார் ஸ்டெட்மென். காதலில் நேர்மை இருந்தால், திருமணம் தேவையில்லை என்பது இவர்கள் கருத்து. புகழும் காதலுமாக வாழட்டும் இந்த இணை.