இலங்கையின் கிழக்கு மாகாணம் மற்றும் ஊவா மாகாணம் ஆகியவற்றில் நிலவும் வறட்சியான காலநிலையில் இன்றும் நாளையும் சிறு மாற்றம் நிகழக்கூடும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் வட மத்திய மாகாணத்தின் பொலன்னறுவை மாவட்டத்திலும் ஓரளவு மழை பெய்யலாம் என மேற்படி திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், மத்திய மாகாணம் மற்றும் சப்ரகமுவ மாகாணம் ஆகியவற்றில் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் வடக்கு மாகாணத்தின் அனைத்துப் பகுதிகளிலும் காலை மற்றும் இரவு வேளைகளில் குளிரான காலநிலை நிலவும் எனவும் தெரிவித்துள்ளதோடு காலை வேளைகளில் நாட்டின் சில பகுதிகளில் பனிமூட்டம் காணப்படும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணத்தின் பல பிரதேசங்களிலும் பனிப்பொழிவு நிலவிவரும் நிலையில் இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் 22 பாகை செல்சியஸ் வெப்ப நிலை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். மாவட்டத்தின் வழமையான சராசரி வெப்ப நிலை 35/27 பாகை செல்சியஸ் எனும் நிலையில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.