சுப்ரீம் கோர்ட்டில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு அவர்களே தீர்வு காண்பர். இதில், அரசு, அரசியல் கட்சிகள் தலையிடக் கூடாது என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதிக்கு எதிராக, நான்கு மூத்த நீதிபதிகள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். தலைமை நீதிபதி குறித்து, பல்வேறு குற்றச்சாட்டுகளை, அவர்கள் முன்வைத்து உள்ளனர்.
இந்த பிரச்னைக்கு இன்னும் தீர்வு ஏற்படவில்லை. இந்நிலையில தனியார் டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பிரதமர் மோடி கூறியதாவது: நமது நீதித் துறைக்கு, மிக பிரகாசமான வரலாறு உள்ளது.
அதில் உள்ளவர்கள் அனைவரும், மிகவும் திறமையானவர்கள். நீதித் துறை மீது, எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து விவாதிக்க விரும்பவில்லை. இந்த பிரச்னையில், அரசோ, அரசியல் கட்சிகளோ தலையிடக் கூடாது.
தங்களுக்குள் உள்ள பிரச்னைக்கு, நீதித் துறையினரே தீர்வு காண்பர்.
நான், காங். , இல்லாத இந்தியா எனக் கூறியது, காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் கூறவில்லை. மத ரீதியிலான நடவடிக்கைகள், வாரிசு அரசியல், ஊழல், ஆட்சி அதிகாரத்தை, தங்கள் கட்டுப்பாட்டில் மட்டும் வைத்திருப்பது போன்ற, பல்வேறு மோசமான, காங்கிரஸ் கொள்கைகளில் இருந்து, நாடு விடுதலை பெற வேண்டும் என்பதே, எங்களுடைய விருப்பம்.
எதிர்ப்பு அரசியலில் இருந்து, காங்கிரஸ் வெளிவர வேண்டும். ‘முத்தலாக்’ முறைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட மசோதாவுக்கு, அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இது, மத ரீதியிலான மசோதா அல்ல; பெண்களின் பாதுகாப்புக்கானது என்பதை, அவர்கள் உணர வேண்டும்.
பார்லி. ,யில் சமர்ப்பிக்கப்பட உள்ள பட்ஜெட், மக்களுக்கு இலவசங்களை வாரி வழங்கும் வகையில் இருக்காது. சீர்திருத்த நடவடிக்கைகளை, மத்திய அரசு தொடர்ந்து அமல்படுத்தும்.
உலக அரங்கில்,இந்தியாவை உயர்த்தும் வகையில் திட்டங்கள் அமல்படுத்தப்படும். செல்லாத ரூபாய் நோட்டு திட்டம், மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது.
வேலைவாய்ப்பு அற்ற வளர்ச்சியை, மத்திய அரசு வழங்கி உள்ளதாக, விமர்சனங்களை கூறுகின்றனர்; அதில் உண்மை இல்லை. வேலைவாய்ப்பு உருவாக்கல் தொடர்பாக, எதிர்க்கட்சியினர் பொய்களை பரப்பி வருகின்றனர்.