புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்களில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தினமும் கலந்துகொண்டு பேசிவருகிறார். எல்லா பொதுக்கூட்டங்களிலும் தவறாமல் ரஜினி, கமல் ஆகியோரின் அரசியல் பிரவேசத்தை காட்டமுடன் விமர்சித்துவருகிறார். அந்த வகையில், சிலட்டூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சரின் பேச்சு, ரஜினி, கமலை மையப்படுத்தியே இருந்தது.
“திரையுலகிலிருந்து சில நடிகர்கள் அரசியலுக்குப் புறப்பட்டு வந்திருக்கிறார்கள். அவர்களின் நடவடிக்கை எப்படி இருக்கிறது என்றால், ‘இரண்டே நிமிடத்தில் ஆயிரம் கிலோ மீட்டரை, கவனமாகக் கேளுங்கள். ஆயிரம் மீட்டர் இல்லை.’ ஆயிரம் கிலோ மீட்டர் தாண்ட முயற்சிக்கிறார்கள். அது சாத்தியமில்லாதது. அரசியல் எனும் சுழலிலும் சூறாவளியிலும் முதல் சுற்றிலேயே அவர்கள் காணாமல் போய்விடுவார்கள். நமது புரட்சித் தலைவரையும் புரட்சித் தலைவியையும் பார்த்துவிட்டு, அவர்கள் அரசியலுக்கு வர ஆசைப்படுகிறார்கள். நமது தலைவரும் தலைவியும் எங்கே… இவர்கள் எங்கே? சினிமாவில் தாங்கள் சம்பாதித்த புகழை இழந்து நிற்கப் போகிறார்கள்” என்றவர், தொடர்ந்து மு.க.ஸ்டாலினை விமர்சித்தார். “இங்கு ஒருவர் முதல்வராகும் கனவில் இருக்கிறார். என்னதான் தாயத்தை உருட்டினாலும் அவரது கனவு நிறைவேறப்போவதில்லை. யார் என்ன முயற்சித்தாலும் அ.தி.மு.க எனும் பெரிய மாளிகையிலிருந்து ஒரு செங்கலைக் கூட அசைக்க முடியாது” என்றார்.