அதிரடியாக உயர்த்தப்பட்ட பஸ்கட்டண உயர்வால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி எழுந்துள்ள நிலையில், பஸ்கட்டண உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகளும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருப்பது, தமிழக ஆட்சியாளர்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது.
போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதியத்துக்குத் தீர்வு காணவேண்டிய அரசு, அந்த ஊழியர்களின் ஊதியத்துக்காக மக்களிடம் சுமையை இறக்கி வைக்க முடிவு செய்துவிட்டது. கிட்டதட்ட 55 சதவிகிதம்வரை பேருந்து கட்டணம் ஏற்றப்பட்டுள்ளது. ஆனால், அரசுத் தரப்பில் இதற்கு அளிக்கப்பட்ட விளக்கத்தில் “இந்தப் பேருந்து கட்டண உயர்வு என்பது அண்டை மாநிலங்களோடு ஒப்பிடும்போது குறைவு தான்” என்று வழக்கமான பதிலே வந்துள்ளது. போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம் உச்சத்தை தொட்டபோதே பேருந்து கட்டணத்தை உயர்த்துவதுகுறித்த முடிவுக்கு அரசு வந்துவிட்டது. ஆனால், பொதுமக்களிடம் கடும் எதிர்ப்பு எழுந்துவிடும் என்று அரசுக்கு ஏற்பட்ட அச்சத்தால் இந்த கட்டண உயர்வை காலதாமதம் செய்து அறிவித்துள்ளனர்.
இன்னொருபுறம், போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டத்தினால் மட்டும் இந்த கட்டண உயர்வு இல்லை என்றும், நாள்தோறும் அதிகரித்து வரும் டீசல் விலையையும் கணக்கில் கொண்டுதான் இந்தக் கட்டண உயர்வு உயர்த்தப்பட்டுள்ளது என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில். போக்குவரத்து ஊழியர்களோ, “அரசுப் பேருந்துக் கட்டணத்தை உயர்த்திதான் எங்களுக்கு ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. விரயமாக ஏராளமான நிதி தமிழகத்தில் செலவாகிக்கொண்டிருக்கிறது. மானியமாக செலவிடப்படும் தொகையை குறைத்தாலே போதும். போக்குவரத்துத் துறை நஷ்டத்தில் இயங்குவதாக தொடர்ந்து அரசு தரப்பில் இருந்து தகவல் பரப்பப்படுகிறது. ஆனால், உண்மை என்னவென்றால் இந்த துறையில் ஊழல் மலிந்துவிட்டது. அனைத்துக்கும் கமிஷன் வாங்குகிறார்கள். அதைக் கட்டுப்படுத்தாமல் ஊழியர்களுக்காக இந்த விலை ஏற்றம் என்று மறைமுகமாக எங்கள்மீது பழியைப் போடுகிறது அரசு” என்கிறார்கள் வேதனையோடு.
பஸ்கட்டண உயர்வுக்குப் பின்னால் மேலும் சில விஷயங்களையும் விவரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள். “சமீபநாள்களாகவே டீசல் விலை ஏகத்துக்கு எகிறிவருகிறது. அரசுப் பேருந்தாவது ஒரளவு இதைச் சமாளித்துவிடலாம் என்று எண்ணினாலும் தனியார் பேருந்துகளின் லாபத்தில் டீசல் செலவினால் துண்டுவிழ ஆரம்பித்தது. இதனால் பஸ்கட்டணத்தை அதிகரித்தால் மட்டுமே தங்கள் தொழிலில் தொய்வின்றி லாபம் ஈட்டலாம் என்ற நிலைப்பாட்டில் அவர்கள் இருந்தார்கள். தனியார் பேருந்து உரிமையாளர்கள் பலமுறை அரசிடம் பேருந்துக் கட்டண உயர்வுகுறித்து தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். தமிழக முதல்வர் எடப்பாடிக்கு நெருக்கமான பலரும் பேருந்து உரிமையாளர்களாக இருந்துவருகிறார்கள். அவர்கள் இந்த முறை கடுமையாக லாபி செய்து இந்தப் பேருந்துக் கட்டண உயர்வை அமலுக்குக் கொண்டு வந்துவிட்டனர். பேருந்துக் கட்டண உயர்வு அரசுப் பேருந்துக்கு மட்டும் அல்ல, தனியார் பேருந்துக்கும் சேர்த்துதான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்” என்கிறார்கள்.
பேருந்து கட்டண உயர்வினால் பல்வேறு களேபரங்களும் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளன. பேருந்து நடத்துநர்களோடு பல இடங்களில் வாய்த்தகராறு ஏற்பட்டு பேருந்து பாதியில் நின்ற சம்பவங்களும் நடந்துள்ளன. முன்பதிவு செய்திருந்த பயணிகளிடம் கூடுதல் கட்டணம் கேட்டு கண்டக்டர்கள் அடாவடித்தனம் காட்டியதால், பல இடங்களில் பிரச்னையும் ஏற்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் கூடுதல் கட்டணம் கேட்ட கண்டக்டரை கத்தியால் குத்தி விட்டு தப்பியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பஸ்கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகத்தின் பல இடங்களில் ஆர்ப்பாட்டம், போராட்டங்களும் நடைபெற்றுள்ளன. இந்த பஸ் கட்டண உயர்வை வைத்து அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்த எதிர்க்கட்சிகளும் திட்டமிட்டுள்ளன. அனைத்து எதிர்க்கட்சிகளும் வரிசையாக ஆர்ப்பாட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க 27-ந்தேதி (சனிக்கிழமை) அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது. அவர்களின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கின்றன. அதே போல், மத்தியில் ஆளும் பா.ஜ.க சார்பிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. 24-ம் அனைத்து மாவட்டங்களில் இவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
25-ம் தேதி பா.ம.க சார்பிலும், 29-ம் தேதி த.மா.கா சார்பிலும். அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. போராட்டக் களத்தில் தீவிரம் காட்டும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் வரும் 22-ம் தேதியும். 25-ம் தேதியும் போரட்டம் நடைபெறவுள்ளது. 23-ம் தேதி அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
எதிர்க்கட்சிகளின் இந்த ஆர்ப்பாட்ட பட்டியலால் அரசு தரப்பும் ஆடிப்போய் உள்ளது. ஆனால், இந்த ஆர்ப்பட்டத்தினால் பஸ்கட்டண உயர்வை திரும்ப பெறும் வாய்ப்பே இல்லை என்கிறார்கள் அரசுக்கு நெருக்கமானவர்கள். எதிர்வினைகளை தெரிந்தே அரசு இந்த கட்டண உயர்வை அறிவித்துள்ளது. தமிழக அரசு இப்போது இருக்கும் நிதி நெருக்கடியில் இந்த உயர்வை திரும்பப் பெற்றால், மீண்டும் போக்குவரத்துத் துறை ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் என்பதால், இந்த ஆர்ப்பாட்டத்தை வேடிக்கை பார்க்க மட்டுமே அரசு தயாராக இருப்பதாக சொல்கிறார்கள்.