ஜூனியர் உலக கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்து அணி, 282 ரன்கள் வித்தியாசத்தில் கனடாவை வீழ்த்தி, ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்தது.
நியூசிலாந்தில், 19 வயதுக்குட்பட்டோருக்கான, 12வது ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. குயீன்ஸ்டவுனில் நடந்த ‘சி’ பிரிவு லீக் போட்டியில், இங்கிலாந்து, கனடா அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற கனடா அணி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.
இங்கிலாந்து அணிக்கு லியாம் பேங்க்ஸ் (120), வில் ஜாக்ஸ் (102) கைகொடுக்க, 50 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 383 ரன்கள் குவித்தது. கடின இலக்கை விரட்டிய கனடா அணிக்கு பிரனவ் சர்மா (24), கேப்டன் அர்ஸ்லான் கான் (21) ஆறுதல் தந்தனர். மற்ற வீரர்கள் ஏமாற்ற கனடா அணி, 31.5 ஓவரில், 101 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது.
ஏற்கனவே வங்கதேசம், நமீபியா அணிகளை வீழ்த்திய இங்கிலாந்து அணி, தொடர்ந்து 3வது வெற்றியை பதிவு செய்து, ‘சி’ பிரிவில் முதலிடத்தை உறுதி செய்தது. குயீன்ஸ்டவுனில் வரும் 23ல் நடக்கவுள்ள காலிறுதியில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன.
நியூசி., அபாரம்
மவுண்ட் மவுன்கனுய் நகரில் நடந்த ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. நியூசிலாந்து அணிக்கு ரச்சின் ரவிந்திரா (76) கைகொடுக்க, 50 ஓவரில், 8 விக்கெட்டுக்கு, 279 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு ரோல்ப்ஸ் (108), டுபிளசி (54) நம்பிக்கை அளித்த போதும், 46.2 ஓவரில், 208 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்டாகி’, 71 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது.
ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ், கென்ய அணிகளை வீழ்த்திய நியூசிலாந்து அணி, ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் ‘ஏ’ பிரிவில் முதலிடம் பிடித்தது. வரும் 25ல் கிறைஸ்ட்சர்ச் நகரில் நடக்கவுள்ள காலிறுதியில் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
வெ. இண்டீஸ் ஆறுதல்
லிங்கனில் நடந்த மற்றொரு ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ், கென்யா அணிகள் மோதின. முதலில் ‘பேட்டிங்’ செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 50 ஓவரில், 7 விக்கெட்டுக்கு, 318 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய கென்ய அணி, 24.4 ஓவரில் 96 ரன்னுக்கு சுருண்டு, 222 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஏற்கனவே நியூசிலாந்து, தென் ஆப்ரிக்க அணிகளிடம் வீழ்ந்து காலிறுதி வாய்ப்பை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆறுதல் வெற்றி பெற்றது.
ஆப்கன் ஏமாற்றம்
‘டி’ பிரிவு லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகள் மோதின. அயர்லாந்து அணி, 50 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 225 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, 49.2 ஓவரில், 221 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்டாகி’, 4 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இருப்பினும் முன்னதாக இலங்கை, பாகிஸ்தான் அணிகளை தோற்கடித்த ஆப்கானிஸ்தான் அணி, ‘டி’ பிரிவில் 2வது இடம் பிடித்து காலிறுதிக்கு தகுதி பெற்றது.
இந்தியா–வங்கம் மோதல்
ஜூனியர் உலக கோப்பை தொடருக்கான லீக் சுற்றுப் போட்டிகள் முடிந்த நிலையில், ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களை பிடித்த நியூசிலாந்து (ஏ1), தென் ஆப்ரிக்கா (ஏ2), இந்தியா (பி1), ஆஸ்திரேலியா (பி2), இங்கிலாந்து (சி1), வங்கதேசம் (சி2), பாகிஸ்தான் (டி1), ஆப்கானிஸ்தான் (டி2) அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. வரும் 26ல் குயீன்ஸ்டவுனில் நடக்கவுள்ள காலிறுதியில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதுகின்றன. மற்ற காலிறுதி போட்டிகளில் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா (ஜன.23, இடம்: குயீன்ஸ்டவுன் ), தென் ஆப்ரிக்கா–பாகிஸ்தான் (ஜன.24, இடம்: கிறைஸ்ட்சர்ச் ), நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் (ஜன.25, இடம்: கிறைஸ்ட்சர்ச் ) அணிகள் மோதுகின்றன.