மன்னார் பொது மயானத்திற்கு அருகில் குவிக்கப்பட்டுள்ள குப்பையில் தீ பரவியதைத் தொடர்ந்து பிரதேசமெங்கும் புகை மண்டலமாக காட்சியளிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் மக்கள் சுவாசிக்க சிரமப்படுவதோடு, மன்னார் பிரதான வீதியூடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
மன்னார் நகர்ப்புறத்தில் சேகரிக்கப்படுகின்ற கழிவுப் பொருட்கள், மயானத்திற்கு அருகில் நகர சபையினால் கொட்டப்படுகின்றன.
இந்த நிலையில் கழிவுப் பொருட்கள் சேர்ந்துள்ள குப்பை மேடு நேற்று மாலை தீப்பற்றி எரிந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக மன்னார் நகர சபையின் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.
இதனால் ஏற்பட்ட புகை மண்டலத்தால் சிறுவர்கள் மற்றும் முதியோர்கள் மூச்சுத்திணறலுக்கு உள்ளாகியுள்ளதோடு, வீதிகளில் நீண்ட நேரமாக வாகன நெரிசல் காணப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
சிறுவர்கள் சிலர் குப்பைகளில் காணப்பட்ட இரும்பு பொருட்களை எடுப்பதற்காக குப்பை மேட்டில் தீ வைத்ததாலேயே தீப்பரவியதாக மன்னார் நகர சபை செயலாளர் தெரிவிக்கின்றார்.