ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
காபூலில் உள்ள இண்டர்காண்டினெல் ஹோட்டலில் வெளிநாட்டவர் அதிகம் தங்குவது வழக்கம். சனிக்கிழமை இரவு இந்த ஹோட்டலில் புகுந்த தீவிரவாதிகள் 4 பேர் திடீரென துப்பாக்கியால் சுட்டதில் படுகாயமடைந்த 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
தீவிரவாதிகள் பதுங்கி உள்ள ஹோட்டலை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த சிலரை தீவிரவாதிகள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.
அவர்களை மீட்க பாதுகாப்பு படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். காபூலில் உள்ள ஹோட்டலில் தீவிரவாதிகள் தாக்கக்கூடும் என்று அமெரிக்க உளவுத்துறை எச்சரித்திருந்த நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.