மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில், ‘மனதில் உள்ளதைப் பேசுகிறேன்’ என்ற பொருளில் ‘மன் கி பாத்’ என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றிவருகிறார்.
மன் கி பாத் நிகழ்ச்சி, கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஒலிபரப்பப்பட்டுவருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்குப் பின்னர், 2018-ம் ஆண்டின் முதல் மன் கி பாத் நிகழ்ச்சி, வரும் 28-ம் தேதி ஒலிபரப்பாக உள்ளது. மன் கி பாத் நிகழ்ச்சிகளில் பேசப்பட வேண்டிய பிரச்னைகள் மற்றும் அலசப்படவேண்டிய துறைகள்குறித்து, நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி ஆலோசனை கேட்பது வழக்கம். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ”உங்களின் கருத்துகளை அறிந்துகொள்வது எப்போதுமே மகிழ்ச்சி தரக் கூடியதுதான். 2018-ம் ஆண்டின் முதல் மன் கி பாத் நிகழ்ச்சிக்கான உங்களது கருத்துகளைத் தெரிவியுங்கள்’’ என்று தனது பெயரில் உள்ள மொபைல் அப்ளிகேஷனுக்கான இணைப்பையும் அவர் கொடுத்திருந்தார். பிரதமர் மோடியின் இந்தப் பதிவுக்குப் பதிலளித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ”அன்புள்ள பிரதமர் மோடி, மன் கி பாத் நிகழ்ச்சிக்கான கருத்துகளைக் கூறும்படி நீங்கள் கேட்டுள்ளீர்கள். அந்த நிகழ்ச்சியில்,
1. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது,
2. தோக்லாம் பகுதியிலிருந்து சீனாவை வெளியேற்றுவது,
3. ஹரியானாவில் நடைபெற்றுவரும் பாலியல் குற்றங்களைத் தடுப்பது உள்ளிட்டவைகுறித்துப் பேசுங்கள்’’ என்று பதிவிட்டுள்ளார்.