வட மாநிலங்களில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக மக்கள் சிரமப்படுகின்றனர். ரயில் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் தொடர்ந்து கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. கடும் குளிர் காரணமாக காலை, இரவு நேரங்களில் மக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.
பனிமூட்டத்தால் எதிரே வரும் வாகனங்கள் சரிவர தெரியாததால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். பெரிய நகரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்துக்களும் நடக்கின்றன.
பனிமூட்டத்தால் ரயில் சேவை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் இருந்து டெல்லி வரும் ரயில்கள், அங்கிருந்து மற்ற இடங்களுக்கு புறப்படும் ரயில்கள் தாமதமாகின்றன. டெல்லியில் இன்று 38 ரயில்கள் தாமதமாக வந்த நிலையில், 7 ரயில்களின் பயண நேரம் மாற்றியமைக்கப்பட்டன.
15 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
டெல்லியில் அதிகபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 8 டிகிரி செல்சியசும் பதிவாகியிருந்தது. கடந்த சில வாரங்களாக பனியின் தாக்கம் இருந்து வரும் நிலையில் இன்னும் இது தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.