காஷ்மீரில் கடந்த 2017ம் ஆண்டில் மட்டும் 213 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அந்த மாநில முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காஷ்மீர் சட்டமன்றத்தில் பாஜ உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் இவர் இவ்வாறு கூறியுள்ளார். காஷ்மீர் சட்டமன்றம் நேற்று கூடியது.
பாஜ எம்எல்ஏ சத் சர்மா தீவிரவாத ஒழிப்பு குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு முதல்வர் மெகபூபா முப்தி அளித்த பதில்:
மாநில அரசு சார்பில் பல்வேறு தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எல்லை தாண்டி தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுப்பது அவற்றில் மிக முக்கியமானது. எல்லைகளில் பாதுகாப்பு வேலி அமைத்தல், அவற்றில் மின்சாரம் பாய்ச்சுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்கவை.
மேலும் இரவு நேர கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 2017ம் ஆண்டில் மட்டும் 213 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பாகிஸ்தானிலிருந்து ஊடுருவிய 127 தீவிரவாதிகள் அடங்குவர்.
அவர்களிடமிருந்து 320 ஆயுதங்கள், ஆயிரக்கணக்கான வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வாறு மெகபூபா கூறினார்.