ஈரோடு மாநகராட்சி சார்பாக நடைமுறைபடுத்தும் சிட்டி கிளினிங் என்ற பெயரில் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பட்டியலின மக்களின் குடியிருப்புகளை அத்துமீறி அகற்றியும், பல பட்டியலின மக்களுக்கு குடியிருப்புகளை விட்டு வெளியேற நோட்டீஸ் அனுப்பியும் இருக்கிறது. அதையடுத்து பிற்படுத்தப்பட அமைப்புகளான தமிழ்புலிகள், இயற்கை மீட்பு இயக்கம், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய சட்டக் கழகம் போன்ற அமைப்புகள் இந்தச் சாலை மறியலில் ஈடுப்பட்டிருக்கிறோம்” என்று 100-க்கும் மேற்பட்டவர்கள் இந்த சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.
இதுப்பற்றி தமிழ்புலிகள் கட்சியின் ஈரோடு மாவட்டச் செயலாளர் சிந்தனைசெல்வன், ”ஈரோடு மாநகராட்சியில் சிட்டி கிளினிங் என்ற பெயரில் நவீன தீண்டாமையை பின்பற்றி வருகிறது. ஈரோடு மாநகராட்சி ஓடை, சாக்கடைகளுக்கு ஒதுக்கு புறம்பாக உள்ள காலி நிலங்களில் ஆதி குடிகளாக பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களும் குடியிருந்து வருகிறார்கள். அந்த மக்களை மாநகராட்சி எல்லையை விட்டு அப்புறப்படுத்தி விட்டு அதே இடத்தில் ஓடைகளையும், சாக்கடைகளையும் ஆக்கிரமிப்பு செய்தும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கட்டிடம் கட்டிக் கொள்ள அனுமதி அளிக்கிறார்கள்.
இதற்காக ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட கருங்கல்பாளையம் அழகுஅரசன் நகர், பெருந்துறை ரோட்டில் உள்ள வாய்க்கால்மேடு, அன்னை சத்யா நகர், கதிராம்பட்டி போன்ற பகுதியில் வசித்த பட்டியலின மக்களை அப்புறப்படுத்தி விட்டார்கள். அதே போல ஓடை பள்ளம், பெரியார் நகர், சூலை போன்ற பகுதிகளில் உடனே காலி செய்ய நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள்.
எழுபது, எம்பது வருடங்களாக ஓடைகளுக்கும், சாக்கடைகளுக்கு ஒதுக்கு புறம்பாக இழிவுகளை சுமந்து உழைத்து வாழும் எங்களை மாநகராட்சியை விட்டு தூக்கி எறிய நாங்கள் என்ன சாக்கடை சேறுகளா? இந்த இடங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்க அவர்கள் என்ன கரன்சி நோட்டுகளா? எங்கள் உயிர் போனால் இந்த இடத்தை விட்டு வெளியேற மாட்டோம்.
ஈரோடு மாநகராட்சிக்கு எங்கள் மீது உண்மையான கருணையும், இரக்கமும் இருக்குமானால் மாநகராட்சிக்கு ஒட்டி பணப் பெருச்சாலிகள் ஆக்கிரமித்து வைத்திருக்கும் இடத்தை மீட்டு எங்களுக்கு இலவச வீடுகள் கட்டி கொடுங்கள். அதை விடுத்து எங்கள் வாழ்க்கையிலும், வாழ்வாதாரத்தில் கை வைக்க நினைத்தால் ஈரோடு மாநகராட்சி பல விபரீதங்களை சந்திக்க நேரிடும்” என்றார்.