பாலமேடு ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்க்க வந்த திண்டுக்கல் சாணார்பட்டி எமக்கலாபுரத்தை சேர்ந்த 19 வயது இளைஞர் காளிமுத்து, காளை முட்டி இறந்து போனார். காளிமுத்துதான் கூலி வேலைக்கு சென்று ஏழ்மையான குடும்பத்தை காப்பாற்றி வந்தார். அவருடைய திடீர்மரணத்தால் அக்குடும்பமே திக்கற்று நின்றது. அமைச்சர்களோ, மாவட்ட நிர்வாகம் எந்தவொரு உதவியும் செய்யவில்லை, மதுரை மருத்துவமனையிலிருந்து ஊருக்கு கொண்டு செல்லக்கூட அவர்களிடம் பணமில்லாத நிலையில், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை காணவந்த திரைப்படத்துறையைசேர்ந்த அபிசரவணன் என்பவர், உடனடியாக உதவினார். காளிமுத்துவின் தங்கையின் கல்விச்செலவை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தவர், அதோடு நில்லாமல் சமூக ஊடகங்ளில் காளிமுத்துவின் குடும்ப நிலையை பகிர்ந்தார்.
இந்த நிலையில் அபிசரவணனுடன் பிரபலமான ஜல்லிக்கட்டு வீரர் முடக்கத்தான்மணிகண்டன், இன்னும் சிலவீரர்களும் இன்று சாணார்பட்டி எமகல்லாபுரத்துக்கு வந்தனர். அங்கு காளிமுத்துவின் வீட்டிற்கு சென்று 1லட்சம் நிதி உதவியும், பசுவும் கன்றும், செல்போனும் வழங்கினார்கள். இதுமட்டுமில்லாமல் காளிமுத்து தங்கையின் படிப்பு செலவுக்கும் குடும்பத்திற்கு உதவுவதகாவும் கூறினார்கள்.
நம்மிடம் பேசிய முடக்கத்தான் மணி, ”குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பிலிருந்த காளிமுத்து, ஜல்லிக்கட்டு காண வந்து பலியாகிவிட்டார். அவரை நம்பியிருந்த குடும்பத்துக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்ய முடிவு செய்துவிட்டேன். என்னைப்போல மற்றவர்களும் உதவினால் நன்றாக இருக்கும் என்றார். அபி சரவணன், ”ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் தீவரமாக போராடிய இளைஞர்களில் நானும் ஒருவன். போராடி கிடைத்த ஜல்லிக்கட்டு போட்டியில் அப்பாவி இளைஞர் பலியான செய்தி மிகவும் வருத்தததை தந்தது. காளிமுத்து பலியான செய்தி கிடைத்தவுடன் உடனடியாக குடும்பத்தை தொடர்புகொண்டு மதுரையில் மருத்துவமனையிலிருந்த உடலை சொந்த கிராமத்திற்கு கொண்டுவரவும், இறுதிச்சடங்கிற்கும் உதவினேன். ஒரு மகனாக காளிமுத்து அவரது குடும்பத்திற்கு உதவியதைப்போல் நிரந்தரமாக செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் தற்போது இங்கு வந்து காளிமுத்துவின் சகோதாரி 6ம் வகுப்பு படிக்கும் அன்னகாமு பெயரில் வங்கிகணக்கு உடனடியாக துவங்கி அதில் ரு 1 லட்சம் வைப்பு நிதியாக செலுத்தியுள்ளேன். குடும்பத்திற்கு உதவட்டும் என்று, பசுவும் கன்றும் தற்போது வழங்கியுள்ளோம். மேலும் மாதந்தோறும் காளிமுத்துவின் குடும்பத்தினருக்கு நிதி வழங்க முடிவு செய்துள்ளேன். சமூக ஊடகங்களில் இவர்களுக்கு உதவும்படி கேட்டுள்ளேன், மற்றவர்களும் உதவினால் இக்குடும்பம் நிம்மதியாக வாழும்”என்றார்.