வட அமெரிக்க நாடான, கனடாவின், ஒன்டாரியோ மாகாண அரசில், இரண்டு இந்திய வம்சாவளி பெண் சட்ட நிபுணர்கள், அமைச்சர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
கனடாவில், 12 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர், டொராண்டோ, வான்கூவர், மான்ட்ரீல், ஒட்டாவா, கல்கரி, வின்னிபெக், எட்மான்டன், வாட்டர்லுா மற்றும் ஹலிபாக்ஸ் நகரங்களில் வசிக்கின்றனர்.
டொராண்டோ பகுதியில், அதிகபட்சமாக, 6.50 லட்சம் இந்தியர்களும், வான்கூவரில், மூன்று லட்சம் பேரும் வசிக்கின்றனர். அவர்களில், மூன்றில் இரண்டு பங்கினர், பஞ்சாபி மொழி பேசுவோர்.
பஞ்சாபி மொழி ஆதிக்கம் உள்ள, அன்டாரியோவின், பிராம்டன்ஸ்பிரிங்டேல் பார்லி., தொகுதியில் இருந்து, ஹரிந்தர் மால்ஹியும், ஹால்டனில் இருந்து, இந்திரா நாயுடு ஹாரிசும், எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சமீபத்தில், ஒன்டாரியோ மாகாண முதல்வர், காத்லீன் வெய்ன் தலைமையிலான அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்ட போது, இவர்கள் இருவரும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.
இவர்களில், கனடாவின் முதல் சீக்கிய,
எம்.பி.,யின் மகளான, மால்ஹி, பெண்கள் மேம்பாட்டு அமைச்சராகவும், ஹாரிஸ், கல்வி மற்றும் குழந்தைகள் நல அமைச்சராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.