மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹபிஸ் சயீத் மீது சட்டப்படி முழு விசாரணை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தானிடம் அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தி உள்ளது.
மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்டவன் பாகிஸ்தான் தீவிரவாதி ஹபிஸ் சயீத். இந்நிலையில், ஜியோ டி.வி.க்கு பேட்டியளித்த பாகிஸ்தான் பிரதமர் அப்பாஸி, “ஹபிஸ் சயீத் மீது பாகிஸ்தானில் எந்த வழக்கும் கிடையாது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது.
வழக்கு இருந்தால்தான் நடவடிக்கை எடுக்க முடியும்” என பதில் அளித்தார். அவரது இந்த பேட்டி அமெரிக்காவிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹீதர் நவ்ரத் கூறியதாவது: எங்களைப் பொறுத்தவரையில் ஹபிஸ் சயீத் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியவர்.
அவரை சட்டத்தின் முன் நிறுத்தி முழுமையான சட்டப்படி நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். வெளிநாட்டு தீவிரவாத அமைப்பின் அடிப்படையில் அவரை நாங்கள் தீவிரவாதியாக பட்டியலிட்டு இருக்கிறோம். 2008 மும்பை தாக்குதலில் அமெரிக்கர்கள் உள்பட பலர் பலியானதற்கு அவர்தான் முக்கிய மூளையாக செயல்பட்டவர்.
எனவே தீவிரவாத விவகாரத்தில் பாகிஸ்தான் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம். இல்லை என்றால் உறுதியான நடவடிக்கையை அமெரிக்கா தொடர்ந்து மேற்கொள்ளும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். 2008 நவம்பர் 26ல் மும்பை கடல் வழியாக நுழைந்த 10 பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.
இந்த தாக்குதல்களை, பாகிஸ்தானில் இருந்து கொண்டு மூளையாக செயல்பட்டு வழி நடத்தியவர் ஹபிஸ் சயீத். 2014 ஜூனில் சயீத் தலைமையில் செயல்படும் அமைப்பை தீவிரவாத இயக்கமாக அமெரிக்கா அறிவித்தது.