எச் 1 பி விசாவில் அமெரிக்காவில் வேலைபார்க்கும் இன்ஜினியர்களின் மனைவிக்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று டிரம்ப் நிர்வாகத்திடம் அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மனு கொடுத்துள்ளன. அமெரிக்காவில் அதிபர் டிரம்ப், குடியுரிமை மற்றும் குடியேற்ற உரிமை சட்டங்களை கடுமையாக்கி வருகிறார்.
சிரியா உள்பட 8 முஸ்லிம் நாடுகளுக்கு அமெரிக்கா விசா வழங்குவது அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், டிரம்பின் தேர்தல் வாக்குறுதிப்படி அமெரிக்கர்களுக்கு உயர் பதவியை பெற்றுத் தருவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
அப்போது வெளிநாட்டினர் உயர் பதவிக்கு வருவதை தடுக்கும் வகையில் எச்1பி விசா பெற்றவர்கள் தங்களுடன் மனைவி மற்றும் குடும்பத்தினரை அழைத்துச் செல்ல சலுகை வழங்கப்பட்டு இருந்தது.
தற்போது அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புதிய குடியுரிமை சட்டப்படி எச் 1 பி விசா பெற்றவர்கள் இனி தங்கள் குடும்பத்தினரை அழைத்துச் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதற்குப் பதில் கிரீன்கார்டு விநியோக எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தினால் இந்திய இன்ஜினியர்கள் தான் அதிகம் பாதிக்கபடுவார்கள். இதனால் அமெரிக்காவில் உள்ள முன்னணி ஐடி நிறுவனங்களான ஆப்பிள், மைக்ரோசாப்ட், பேஸ்புக், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களின் செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று தெரிகிறது.எனவே அமெரிக்க தொழில்நுட்ப வர்த்தக குழுவின் பிரதிநிதிகள் இதுதொடர்பாக டிரம்ப் நிர்வாகத்திடம் மனு கொடுத்தனர்.
இந்த குழுவில் ஆப்பிள், மைக்ரோசாப்ட், பேஸ்புக், கூகுள், அமெரிக்க வர்த்தக அமைப்பு, பிஎஸ்ஏ ஆகிய முன்னனி நிறுவனங்கள் இடம் பெற்று இருந்தன. மேலும் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற துறை தலைவர் லீ பிரான்சிஸ்சிடம் கடிதம் கொடுத்தனர்.
அந்த கடிதத்தில்,’ எச் 1 பி விசா பெற்று கிரீன்கார்டு பெற விண்ணப்பித்து சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் ஊழியர்களின் மனைவிக்கும் எச் 4 விசா அடிப்படையில் அனுமதி வழங்குவதை நிறுத்தக்கூடாது’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
2015ல் அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா, எச் 1 பி விசா பெற்றவர்களின் மனைவியும் பணிபுரிய அனுமதி வழங்கி உத்தரவிட்டார். 2017 அக்டோபர் மாத கணக்குப்படி 1,33,502 ேபர் சட்டப்பூர்வ நிரந்தர குடியுரிமை அனுமதி கேட்டு விண்ணப்பித்து உள்ளனர்.