சென்னையிலுள்ள பாடசாலை ஒன்றில் மாணவனுக்கு அளிக்கப்பட்ட `டக்வாக்’ தண்டனையால் அவரது உயிர் பறிபோனது. அதே தண்டனையால் மயக்க மடைந்த இரண்டு மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பெரம்பூரில் உள்ள தனியார் பாடசாலையில் 10 தரத்தில் பயிலும் மாணவனே இவ்வாறு உயிரிழந்தான். மாணவன் மயக்கமடைந்துள்ளான் என்று பெற்றோருக்குத் தகவல் வழங்கப்பட்டது. அதையடுத்து பெற்றோர் மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கு மாணவன் இறந்து விட்டான் என்று தெரிவிக்கப்பட்டது.
”5 நிமிடம் தாமதமாகச் சென்ற மாணவர்களை உடற்கல்வி ஆசிரியர் மைதானத்தில் நிற்க வைத்தார் . கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு முட்டி போட்டு மைதானத்தை வாத்து போல (டக்வாக்) சுற்றி வர வேண்டும் என்று பணித்தார். அதன்படி மாணவர்களும் மைதானத்தை சுற்றி வந்தனர். அப்போது மூன்று மாணவர்கள் மைதானத்தில் மயங்கி விழுந்தனர். மயக்கமடைந்த மாணவர்களுக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டது. மற்ற இரண்டு மாணவர்களுக்கு மயக்கம் தெளிந்துள்ளது. ஆனால், நரேந்திரனுக்கு மயக்கம் தெளியவில்லை. அதனால் தனியார் மருத்துவமனைக்கு நரேந்தினனை அழைத்துச் சென்றனர்.” என்று சக மாணவர்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர்.
பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. பாடசாலைக்கு விரைந்த பொலிஸார் சி.சி.ரிவி கமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, மாணவன் நரேந்தர் மற்றும் சில மாணவர்கள் மைதானத்தைச் சுற்றிவரும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அதோடு, நரேந்தரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் காட்சிகள் இருந்தன.