சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், 169.02 கோடி ரூபாய் செலவில், புதிய கட்டடங்கள் கட்டும் பணி மற்றும் மருத்துவமனையை தரம் உயர்த்தும் பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. புறநோயாளிகள் பிரிவுக்கு மட்டும் எட்டு தளங்களை ஒதுக்க, மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம், நெருக்கடி இன்றி, நோயாளிகள் தரமான சிகிச்சை பெற, விரைவில் வழிவகை செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.சென்னை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை, ஆசியாவிலேயே மிகப்பெரியது. சிறந்த சேவைக்காக, தேசிய அளவில், பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது.இங்கு, 3,500 படுக்கைகள், 800 டாக்டர்கள், 890 செவிலியர்கள், 750 உதவியாளர்களோடு, நாள் ஒன்றுக்கு, 15 ஆயிரம் புறநோயாளிகளுக்கும், 3,000 உள்நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.இந்த மருத்துவமனை, சென்னை மருத்துவக் கல்லுாரி மேற்பார்வையில் செயல்படுகிறது. இங்கு, அனைத்து வகையான உடல் பாதிப்புகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.இதில், சிறுநீரகம், இதயம், மூட்டு, காது, மூக்கு தொண்டை, புற்றுநோய், நாளமில்லா சுரப்பிகள், எலும்பு நோய்கள், ரத்த நாளங்கள், நரம்பியல், இரைப்பை, குடல் நோய்கள், கல்லீரல், சர்க்கரை நோய், நெஞ்சக நோய்கள், ரத்த நோய்கள், தோல் வியாதிகள் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை.இந்த துறைகளுக்கு, தனித்தனி பிரிவுகள் உள்ளன.இதில், பிரமாண்டமாக உள்ள, ‘டவர் 1’ கட்டடத்தில், மருந்து, சிகிச்சைகள், பரிசோதனைகள் நடக்கின்றன. ‘டவர் 2’ கட்டடத்தில், அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.மேலும், வி.ஐ.பி.,க்கள் தங்கி சிகிச்சை பெறுவதற்கென, தனிப்பிரிவு ஒன்று, அதிநவீன வசதிகளுடன் இயங்குகிறது. இதில், தங்குவதற்கு மட்டும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.இந்த மருத்துவமனை வளாகத்திலேயே, ‘அம்மா’ முழு உடல் பரிசோதனை, 1,000, 2,000, 3,000 ரூபாய் என, மூன்று முறையில் பரிசோதனைக்கான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.தமிழகம் மட்டுமில்லாது, அண்டை மாநிலத்தவரும், ராஜிவ் காந்தி மருத்துவமனையை தேடி வந்து, தரமான சிகிச்சை பெற்று செல்கின்றனர்.இந்நிலையில், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையை, மேலும் தரம் உயர்த்தும் வகையில், மூட்டு மற்றும் இணைப்பு தசை துறை, சிறுநீரகவியல் மற்றும் அறுவை சிகிச்சை துறை, கல்லீரல் துறை மற்றும் புறநோயாளிகள் பிரிவுகளுக்கு, 169.02 கோடி ரூபாய் மதிப்பில், புதிய கட்டடங்கள் கட்டப்படுகின்றன.இது குறித்து, சுகாதாரத் துறை செயலர், ராதாகிருஷ்ணன் கூறியதாவது:அரசு மருத்துவமனைகளை, உலக தரத்துக்கு உயர்த்தும் நடவடிக்கையில், தமிழக அரசு செயல்படுகிறது.இதில், அதிக நோயாளிகள் வந்து செல்லும், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையை, மேலும் நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இந்த மருத்துவமனையில், மூட்டு மற்றும் இணைப்பு தசை துறைக்கு, 19.65 கோடி ரூபாய் செலவில், எட்டு அடுக்குமாடி கட்டடம் கட்டப்படுகிறது.சிறுநீரகவியல் மற்றும் அறுவை சிகிச்சை துறைக்கு, 29.48 கோடி ரூபாயில், எட்டு அடுக்குமாடி கட்டடம் கட்டப்படுகிறது.கல்லீரல் துறைக்கு, 16.70 கோடி ரூபாயில், ஐந்து அடுக்குமாடி கட்டடம் கட்டப்படுகிறது.அதே போல், புறநோயாளிகள் பிரிவுக்கு, 58.65 கோடி ரூபாய் செலவில், நான்கு அடுக்குமாடி கட்டடம் கட்டப்படுகிறது. இந்த கட்டடத்தை, எட்டு அடுக்காக மாற்றி பயன்படுத்த, 44.54 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.மேலும், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், தற்போது உள்ள கட்டடங்களை, வண்ணம் பூசி பொலிவுபடுத்தவும் திட்டமிட்டு உள்ளோம். இந்த பணிகள் அனைத்தும் விரைவில் முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.