மத்திய வங்கி பிணைமுறி கொடுக்கல்வாங்கல் தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும் பாரிய ஊழல் மோசடிகள், அரச வளங்கள், சிறப்புரிமைகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு ஆகியவற்றின் இறுதி அறிக்கையில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தல் மற்றும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடலொன்று நேற்று(17) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
சட்டமா அதிபர், மத்திய வங்கி ஆளுநர், ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்ட இக் கலந்துரையாடலில் பிணைமுறி ஆணைக்குழு அறிக்கையில் முன்வைக்கப்பட்ட சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பின்வரும் விடயங்கள் குறித்து கவனம்செலுத்தப்பட்டது.
பிணைமுறி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் பிரதானமாக நான்கு பகுதிகளைக் கொண்டதாகும். அவை, மேலும் விசாரணை செய்தல், சட்ட நடவடிக்கை எடுத்தல், தற்போதுள்ள சட்டத்தை திருத்தம் செய்தல் மற்றும் தேவையான புதிய சட்டங்களை ஆக்குதல் எதிர்காலத்தில் இதுபோன்ற ஊழல் மோசடிகள் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு எடுக்க வேண்டிய ஏனைய நடவடிக்கைகள் என்பனவாகும்.
அந்த வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள குற்றங்கள் தொடர்பில் வகைசொல்லவேண்டியவர்களுக்கு எதிராக குற்றவியல் வழக்குத் தொடுத்தல், அரசாங்கத்திற்கும் ஊழியர் சேமலாப நிதியத்திற்கும் ஏற்பட்டுள்ள நட்டத்தை அடைக்கும் பொருட்டு சட்ட ரீதியற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சிவில் வழக்குத் தொடுத்து நட்டஈட்டைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்தல் மேலும் பல்வேறு அரச நிறுவனங்களில் சேவைசெய்யும் இந்த குற்றத்துடன் தொடர்பான சட்டரீதியற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆட்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தல் போன்ற விடயங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
குற்றவியல் வழக்குத் தொடரல் சட்டமா அதிபரினாலும் ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு பணிப்பாளர் நாயகத்தினாலும் மேற்கொள்ளப்படும் என்பதுடன், இந்த குற்றத்துடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடையவர்களுக்கு எதிராக தண்டனை சட்டக் கோவை, பொது சொத்துக்கள் சட்டம், பணச் சலவை சட்டம் போன்ற சட்டங்கள் பயன்படுத்தப்படும்.
மேலும் பிணைமுறி ஆணைக்குழு சமர்ப்பித்துள்ள சாட்சிகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ள விடயங்களில் மாற்றங்கள் மற்றும் மேலதிக தவறுகள் கண்டறியப்பட்டால் அவற்றை மேற்கொண்டவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இடம்பெற்றுள்ள குற்றம் தொடர்பில் மேலதிக விசாரணை செய்யும்போது சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு ஏற்ப குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தில் தனியான பிரிவொன்றை ஆரம்பிக்கவும் இலங்கை மத்திய வங்கி நிதிப் புலனாய்வுப் பிரிவினதும் செலாவணி கட்டுப்பாட்டாளரினதும் உதவியை பெற்றுக்கொள்ளவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதுடன், இலங்கை மத்திய வங்கியின் ஊடாக சட்டக் கணக்காய்வொன்றை மேற்கொள்ளவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது அனைத்து நிறுவனங்களுக்கிடையேயும் சிறந்த ஒருங்கிணைப்பை மேற்கொண்டு ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விசாரணை சார்ந்த பொருட்கள் மற்றும் சாட்சிகளை நேரடியாக கவனத்திற்கொள்ளக் கூடியவாறு ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு சட்டத்தை திருத்துவதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
குற்றவியல் நடவடிக்ககைளில் பொறுப்புக்கள் தொடர்பில் குறித்த ஆட்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கும் சில நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள குற்றங்கள் தொடர்பல் சட்ட ரீதியான பொறுப்புக்களை கவனத்திற்கொள்ளவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள நட்டம் மற்றும் நட்டஈட்டை அறவிடுவதற்கு சிவில் வழக்குத் தொடர பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்ற போதும் சிவில் வழக்குக்கு நீண்ட காலம் எடுக்கும் என்பதால் இத்தகைய வழக்குகளுக்காக சிவில் வழக்கு ஏற்பாடுகள் செயன்முறையில் திருத்தங்களை கொண்டுவருவது தொடர்பாக சட்ட மா அதிபர் திணைக்களம் கவனம் செலுத்தும்.
இதன் போது தற்போது பர்பசுவல் ட்ரஷரீஸ் நிறுவனம் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்கள் மற்றும் வேறு ஆட்களினால் பிணைமுறி கொடுக்கல் வாங்கல் ஊடாக சட்ட ரீதியற்ற வகையில் திரட்டப்பட்ட சொத்துக்களை தடைசெய்வதற்கு சட்ட மா அதிபர் கவனம் nலுத்திவருகிறார்.
வழக்கு செயன்முறைகளுக்கான தாமதம் காரணமாக அரசாங்கத்திற்கும் ஊழியர் சேமலாப நிதியத்திற்கும் அறவிடப்பட வேண்டிய பணத்தை அடைப்பதற்கு அரசியலமைப்பை மீறாத வகையில் பாராளுமன்ற சட்டமொன்றை நிறைவேற்றுதல் அதாவது அரசியலமைப்பு அதிகாரத்தை பயன்படுத்த வேண்டுமா என்பதை கண்டறிவதற்கு ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பாக கண்டறியும் பணி சட்டமா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நிதிச் சட்டம், பிணைமுறி கட்டளைச் சட்டம் மற்றும் தேசிய திறைசேரி உறுதிமுறி கட்டளைச் சட்டம் போன்ற சட்டங்களை திருத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஊழியர் சேமலாப நிதியத்தின் நிதியைப் பயன்படுத்தி 2008-2014 காலப்பகுதியில் மத்தியவங்கியின் திரைசேறி பிணை முறி மற்றும் உறுதி முறிகள் கொடுக்கல்வாங்கல்களை கண்டறிவதற்கு சட்ட கணக்காய்வொன்றை செய்யவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அரச தொழில்முயற்சி தொடர்பான பாராளுமன்ற குழுவில் உறுப்புரிமை வகிக்கும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்த குழுக்களின் ஊடாக திரைசேறி பிணைமுறி மற்றும் பர்பசுவல் ட்ரஷரீஸ் நிறுவனம் தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்ட காலப்பகுதியில் அந்நிறுவனத்தின் தலைவர் அர்ஜுன் எலோசியசுடன் தொடர்பாடல்களை மேற்கொண்டமையும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டுவரப்படவுள்ளதுடன், அக்குழுவின் உறுப்பினர்களுக்கு விசேட நன்னடத்தை முறைமையொன்றை விதிப்பது தொடர்பில் சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டுவரவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளின் பிழையான நடத்தைகளுக்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பில் விரிவானதொரு உரையாடலை ஆரம்பிப்பதற்கு ஆணைக்குழு அறிக்கையில் பெற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் நிறையவுள்ளன எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அரசாங்கத்தில் மேலிருந்து வெளிப்படைத்தன்மையை பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார்.
இத்தகைய குற்றங்கள் இனியும் இடம்பெறுவதை தவிர்ப்பதற்கு மத்திய வங்கியில் அமைந்துள்ள அரச கடன் திணைக்களத்தையும் நிதிச் சபையையும் உரிய முறையில் மறுசீரமைக்கவும் வகைகூறலை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
பிணைமுறி ஆணைக்குழு அறிக்கையும் பாரிய ஊழல் மோசடி தொடர்பாக கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவிற்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், அது இன்று பாராளுமன்றத்திற்கும் சமர்ப்பிக்கப்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
பிணைமுறி விவகாரம் தொடர்பில் இருந்துவரும் கூடிய மக்கள் கவனத்தைக் கருத்திற்கொண்டு அவ்வறிக்கையை உடனடியாக இணையத்தளத்தில் பதிவேற்றுமாறு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை வழங்கினார். அந்த அறிக்கையை www.presidentsoffice.gov.lk/ என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ, தேசிய பொருளாதார சபையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் லலித் சமரகோன் ஆகியோரும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.