”பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்க வேண்டுமானால், அவர்களை ஆதரிக்கும் அரசியல் கட்சியையும் சேர்த்தே அழிக்க வேண்டும்,” என, ராணுவ தளபதி, பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர், பெஞ்சமின் நெதன்யாஹுவின் ஆறு நாட்கள் இந்தியப் பயணத்தின் ஒரு பகுதியாக, இரு நாடுகளும் எதிர்கொண்டுள்ள பிரச்னைகள் குறித்து, இரு தரப்பு பேச்சு நடக்கிறது. இந்த பேச்சில் பங்கேற்ற, இந்திய ராணுவ தளபதி, பிபின் ராவத், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எல்லா பயங்கரவாத அமைப்புகளுக்கும், ஓர் அரசியல் கட்சியுடன் நெருங்கிய, தொடர்பு இருக்கிறது. அவர்கள் உதவியுடன் தான், தங்கள் கொள்கைகளை பிரசாரம் செய்கின்றனர். அரசு சாரா நிறுவனங்கள் என்ற பெயரில், நிதி திரட்டுகின்றனர். இப்படி பயங்கரவாதமும், அரசியலும் ஒன்றாகவே இணைந்து பயணிக்கிறது. இரண்டையும் ஒரே நேரத்தில் ஒழித்தால் மட்டுமே, பயங்கரவாதத்தை ஒடுக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.