தினகரன் ஆதரவாளரான சம்பத், அ.தி.மு.க., சார்பில், தனக்கு வழங்கப்பட்ட, ‘இனோவா’ காரை, கட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தார்.
மேடை பேச்சாளரான சம்பத், 2012ல்,ம.தி.மு.க.,விலிருந்து விலகி, ஜெ., முன்னிலையில், அ.தி.மு.க.,வில் இணைந்தார். அவர், அ.தி.மு.க., பொதுக்கூட்டங்களில் பேசுவதற்கு வசதியாக, அவருக்கு கட்சி சார்பில், 2012 டிச., 16ல், இனோவா கார் வழங்கப்பட்டது.
அந்த கார், அ.தி.மு.க., பொருளாளர், பன்னீர்செல்வம் பெயரில் வாங்கப்பட்டிருந்தது. ஜெ., மறைவுக்கு பின், அ.தி.மு.க., பொதுச்செயலராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சம்பத், இனோவா காரை, கட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தார். அதன்பின், மீண்டும் சசிகலாவை சந்தித்து, ஆதரவு தெரிவித்தார். அவரிடம் மீண்டும் வழங்கப்பட்டது.
தற்போது, தினகரன் ஆதரவாளராக, சம்பத் செயல்பட்டு வந்தார். அதனால், அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, தன்னிடமிருந்த காரை, நேற்று கட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தார்.