”என் மீதான ஊழல் வழக்குகள், வெறும் வெத்து வேட்டுகள்,” என, பாக்., முன்னாள் பிரதமர், நவாஸ் ஷெரீப் கூறினார்.’பனாமா கேட்’ ஊழல் தொடர்பாக, பிரதமர் பதவியிலிருந்து, நவாஸ் ஷெரீபை தகுதி நீக்கம் செய்து, பாக்., உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. நவாஸ் மீதான ஊழல் வழக்குகளை, தேசிய பொறுப்புடைமை நீதிமன்றம் விசாரிக்கிறது.
இந்த ஊழல் வழக்குகள் விசாரணை தொடர்பாக, இஸ்லாமாபாதில் உள்ள, தேசிய பொறுப்புடைமை நீதிமன்றத்தில், நவாஸ் ஷெரீப் நேற்று ஆஜரானார். அவருடன், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, நவாசின் மகள், மரியம், மருமகன், முகமது சப்தார் ஆகியோரும் ஆஜராகினர்
விசாரணையின் போது, இரு சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.
அவர்களிடம், நவாசின் வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்தார். பின், வழக்கு விசாரணை, ௨௩க்கு ஒத்தி வைக்கப்பட்டது
நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த நவாஸ் ஷெரீப், நிருபர்களிடம் கூறியதாவது:
பாகிஸ்தானில், ௧௯௬௦ல், ஒரு திரைப்படம் வெளியானது. மிக பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட அந்த படம், முதல் வாரம், பிரமாதமாக ஓடியது. அதன்பின், போதிய ரசிகர்கள் வராமல் படுதோல்வி அடைந்தது.
அது போல், என் மீதான ஊழல் வழக்குகளும் தோல்வி அடையும்; ஏனெனில், அவை அனைத்தும் வெத்து வேட்டுகள்.இவ்வாறு அவர் கூறினார்.