இந்தியாவுக்கு எதிராக, செஞ்சுரியனில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டி குறித்து, தென் ஆப்ரிக்க வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் அளித்த பேட்டி: செஞ்சுரியன் சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில், ஏராளமான போட்டிகளில் விளையாடியுள்ளேன். ஆனால் இங்கு இது போன்ற ஒரு ஆடுகளத்தை நான் முன்னெப்போதும் பார்த்ததில்லை.
இந்த ஆடுகளம், இந்திய ஆடுகளங்கள் போல் உள்ளதா? என ஒப்பிட்டால், அதற்கு நான் 100 சதவீதம் ஆம் என்றுதான் கூறுவேன். இங்கு முதல் நாளில், சுழற்பந்து வீச்சாளர் ஒருவர் இவ்வளவு அதிகமான ஓவர்களை வீசியதாக கேள்விபட்டதில்லை (முதல் நாளில் அஸ்வின் 30க்கும் அதிகமான ஓவர்களை வீசினார்).
இந்திய துணை கண்டத்தில் விளையாடுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. 2வது இன்னிங்ஸில் நாங்கள் விரைவாக 2 விக்கெட்களை இழந்த நிலையிலும், டி வில்லியர்ஸ் மற்றும் டீன் எல்கர் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
இன்று (நேற்று) சிறிது நேரம் மழை மற்றும் போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் பாதிக்கப்பட்டிருந்தாலும், இந்த போட்டியில் முடிவு கிடைப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே நான் கருதுகிறேன். 5ம் நாளில் 250 ரன்கள் என்பது பாதுகாப்பான இலக்காக இருக்கும் என நான் நினைக்கிறேன்.
அது மிக சிறப்பான ஸ்கோராகவும் இருக்கும். இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, பும்ரா சிறப்பாக விளையாடினர்.இவ்வாறு அவர் கூறினார்.