சட்டமாஅதிபர் திணைக்களத்தை தற்காலிக ஏற்பாடாகவேனும் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்குமிடையிலான கலந்துரையாடலின்போதே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்குரிய பரிந்துரையை சட்டமா அதிபர் திணைக்களமே மேற்கொள்ளும். அந்தத் திணைக்களமானது ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள அமைச்சர் ஒருவருக்குகீழ் இருக்கின்றது.
எனவேதான், பிணைமுறி விவகாரத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கி, இழப்பீட்டுத்தொகையை ஈடுசெய்யும்வரையிலாவது மேற்படி திணைக்களத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருமாறு கோரப்பட்டுள்ளது.
அதேவேளை, அரசுடன் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை அறிக்கையை பகிரங்கப்படுத்திய சிறந்த தலைவராக ஜனாதிபதி விளங்குகிறார் என மூத்த அரசியல்வாதிகளும், இராஜதந்திரிகளும் ஜனாதிபதிக்கு பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.