சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய ராணுவத் தளபதியாக கே.எம்.கரியப்பா 1949-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி பதவியேற்றார். அந்த தினம் ஒவ்வோர் ஆண்டும் ராணுவ தினமாகக் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், இன்று இந்திய ராணுவ தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் ராணுவ வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ராம்நாத் கோவிந்த் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “இந்திய ராணுவத்தில் பணியாற்றும் வீரர்கள், வீராங்கனைகள், இந்திய ராணுவத்துக்காகப் பணியாற்றியவர்கள், அவர்களின் குடும்பத்தினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் தேசத்தின் பெருமிதங்கள், சுதந்திரத்தின் காவலர்கள். நீங்கள் விழித்திருப்பதால்தான் குடிமக்கள் நிம்மதியாகத் தூங்குகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும் காலங்களில் ராணுவத்தின் பணிகள் மெச்சத்தக்கவை. இந்திய ராணுவம், தேசத்தையே முதன்மையாகக் கருதுகிறது. நாட்டுக்காக உயிர்த்தியாகம்செய்த அனைத்து வீரர்களுக்கும் எனது வணக்கத்தைத் தெரிவிக்கிறேன். உங்களைப் போன்ற வீரம் நிறைந்த ஹீரோக்களை இந்தியா எப்போதும் மறந்து விடாது” என்று கூறியுள்ளார்.
ராணுவ தினக் கொண்டாட்டம் நிகழ்ந்த அதே நேரத்தில், இந்திய ராணுவம் எல்லையில் நடத்திய தாக்குதலில் 7 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்ததாக இந்தியத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் 4 பேர் படுகாயம் அடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தைச் சேர்ந்த 6 பயங்கரவாதிகளை கொன்றிருப்பதாகவும் இந்திய ராணுவம் கூறியுள்ளது. காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே இந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. காஷ்மீரின் ராஜோவ்ரி மாவட்டத்தில், பாகிஸ்தான் ராணுவம் நேற்று நடத்திய தாக்குதலில், இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதற்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. அதேசமயம், தங்கள் தரப்பில் 4 வீரர்கள் மட்டுமே உயிரிழந்ததாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.