9 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படம் நாடோடிகள். சமுத்திரகனியை திரைப்பட இயக்குனராக நிலை நிறுத்திய படம். சசிகுமாரை ஆக்ஷ்ன் ஹீரோவாக்கிய படம். பரணி, அனன்யா, அபிநயா ஆகியோர் அறிமுகமான படம். காதலர்களை சேர்த்து வைக்கும் நண்பர்களின் கதை. அப்படி கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த ஒரு ஜோடி, சில நாட்களிலேயே பிரிந்து நிற்கும்போது அவர்களுக்கு செமத்தியாக ஒரு பாடம் நடத்துவார்கள் நண்பர்கள். படத்தின் இறுதியில் அவர்களுக்கு இன்னொரு காதலர்களை சேர்த்து வைக்கும் பணி வரும். அது இரண்டாம் பாகத்துக்கான லீட்.
ஆனால், இரண்டாம் பாகம் தயாராக 9 ஆண்டுகள் ஆகிவிட்டது. காரணம் நாடோடிகள் படத்திற்கு பிறகு சமுத்திரகனியும், சசிகுமாரும் தனித்தனி ரூட்டில் பிசியாகிவிட்டார்கள். சமுத்திரகனி இயக்க, சசிகுமார் நடிப்பார், சசிகுமார் நடிக்க சசிகுமார் இயக்குவார். இப்போது மீண்டும் இருவரும் இணைந்து நாடோடிகள் இரண்டாம் பாகத்தை உருவாக்குகிறார்கள்.
இன்ஸ்பைர் எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார், என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த முறை பேஸ்புக் மூலம் காதலித்து விட்டு சேர முடியாமல் தவிக்கும் காதலர்களை நேரடியாக காதலிக்க வைத்து சேர்த்து வைக்கிற கதை என்கிறார்கள். படத்தின் மற்ற நடிகர் நடிகைகள் பற்றி விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்.