உலகின் அதிக பலமான கடவுச்சீட்டுக்கான தரவரிசையில் இலங்கை தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகின்ற நிலையில் பிரான்ஸ் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.
அதற்கமைய இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளதாக புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான Henley கடவுச்சீட்டு குறியீட்டின் தரவுப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
கடவுச்சீட்டை வைத்திருப்போர் விசா இல்லாமல் எத்தனை நாடுகளுக்குப் பயணம் செய்ய முடியும் என்பதன் அடிப்படையில் அந்த மதிப்பீடு நடத்தப்பட்டது.
இந்த தரவரிசையில் தொடர்ந்து 5வது ஆண்டாக ஜேர்மன் முதலிடத்தை பிடித்துள்ளது. அதற்கமைய ஜேர்மன் கடவுச்சீட்டு வைத்திருப்போர் 177 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் செய்ய முடியும்.
இந்த தரவரிசையில் 10 வருடங்களின் பின்னர் சிங்கப்பூர் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. சிங்கப்பூர் கடவுச்சீட்டு வைத்திருப்போர் 176 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் செய்ய முடியும்.
தரவரிசையில் டென்மார், பின்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், நோர்வே, சுவீடன், ஐக்கிய ராஜ்ஜியம் ஆகிய நாடுகள் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளன. இந்த நாடுகளின் கடவுச்சீட்டை வைத்திருப்போர் 175 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஆஸ்ரியா, பெல்ஜியம், நெதர்லான்ட், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் நான்காம் இடத்தை பிடித்துள்ளன. இந்த நாடுகளின் கடவுச்சீட்டை வைத்திருப்போர் 174 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
பட்டியலில் அமெரிக்கா ஐந்தாவது இடத்தையும் கனடா ஆறாமிடத்தையும் பிடித்துள்ளன.
தரவரிசையில் இந்தியா 86 வது இடத்தை பிடித்துள்ளது. இந்திய கடவுச்சீட்டு வைத்திருப்போர் விசா இன்றி 49 பயணிக்க முடியும்.
தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வரும் இலங்கை கடவுச்சீட்டுக்கு 93 வது இடம் கிடைத்துள்ளது.
இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்போர் 41 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.