கிழக்கு பாகிஸ்தானில் உள்ள கசூர் நகரில் கடந்த 4-ம் தேதி ஜைனப் அன்சாரி என்ற 7வயதுச் சிறுமி ஒருவர் புனித குர்ஆன் வகுப்புக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்புகையில் மர்மநபரால் கடத்தப்பட்டார். கடந்த 9-ந்தேதி அந்தச் சிறுமி உடலில் பலத்த காயங்களுடன், குப்பை கிடங்கில் சடலமாக மீட்கப்பட்டார். அந்தச் சிறுமியின் பெற்றோர், புனித ஹஜ் பயணத்துக்குச் சென்றிருந்த நேரத்தில் இந்தத் துயரச் சம்பவம் நடந்தது.
சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட செய்தியை அறிந்த மக்கள் பெரும் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறையை அடக்க போலீஸார் நடத்திய தடியடி, துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியானார்கள். இந்நிலையில், பாகிஸ்தானிலிருந்து ஒளிபரப்பாகும் ‘சமா’ சேனலில் பணியாற்றும் கிரண் நஸ் என்னும் பெண் செய்திவாசிப்பாளர் வித்தியாசமானமுறையில் இந்தச் சம்பவத்துக்குத் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். அவர் தனது 2 வயது மகளுடன் சேனலில் தோன்றி தனது எதிர்ப்பை கடுமையாகத் தெரிவித்தார்.
“இன்று நான் உங்கள் முன் செய்திவாசிப்பாளர் கிரண் நஸ் ஆக வரவில்லை. 2 வயது குழந்தைக்குத் தாயாக, என் மகளுடன் இங்கு வந்து அமர்ந்திருக்கிறேன். பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட அந்த 7 வயதுச் சிறுமியின் சிறிய சவப்பெட்டி மிக வலிமையானதாக மாறிவிட்டது. அந்த சவப்பெட்டிக்கு முன் ஒட்டுமொத்த பாகிஸ்தானும் புதைக்கப்பட்டுவிட்டது என்பதே உண்மையாகும்” என்று அவர் உணர்ச்சிகரமாகப் பேசினார்.
அவருடைய இந்தச் செயல் அனைத்துத் தரப்பினரின் பாராட்டையும் பெற்றுள்ளது. குழந்தையுடன் அவர் அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.