பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த ராணுவ நிதியுதவியை அமெரிக்க அரசு நிறுத்தியதைத் தொடர்ந்து, அமெரிக்காவுடனான ராணுவ உறவை பாகிஸ்தான் தற்காலிகமாக முறித்துக்கொண்டுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள தலிபான், ஹக்கானி பயங்கரவாதிகளின் புகலிடங்களை அழித்து ஒழிப்பதற்காக அமெரிக்க அரசு பாகிஸ்தானுக்கு ராணுவ உதவி வழங்கிவருகிறது. ஆனால், அந்த நிதியை பாகிஸ்தான் சரிவரப் பயன்படுத்துவதில்லை. தொடர்ந்து அங்கு பயங்கரவாதிகள் சுதந்திரமாகச் சுற்றித்திரிகிறார்கள் என்று அமெரிக்கா அடிக்கடி கூறிவந்தது.
இந்நிலையில், இம்மாத தொடக்கத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேரடியாகவே பாகிஸ்தானை வசைபாடினார். அமெரிக்காவிடமிருந்து கடந்த 15 ஆண்டுகளில் பாகிஸ்தான் 3,300 கோடிக்கும் மேல் ராணுவ நிதி பெற்றுள்ளது. ஆனால், அந்தப் பணத்தைப் பெற்றுக்குக் கொண்டு பொய்யையும், ஏமாற்று வார்த்தைகளையும் பாகிஸ்தான் சொல்லி வருகிறது என்று வசைபாடினார் ட்ரம்ப். பாகிஸ்தானுக்கு ராணுவ நிதியுதவி நிறுத்தப்படும் என்றும் அறிவித்தார்.
இது பாகிஸ்தான்-அமெரிக்க உறவில் விரிசலை ஏற்படுத்தியது. பாகிஸ்தானுக்கான ராணுவ நிதியுதவி நிரந்தரமாக நிறுத்தப்படவில்லை. இடைக்காலமாகத்தான் ரத்து செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் எடுக்கும் நடவடிக்கைகளைப் பொறுத்தே நிதி விடுவிக்கப்படும் என்று அமெரிக்கா உறுதியாகக் கூறிவிட்டது.
இதையடுத்து பாகிஸ்தான் பதில் நடவடிக்கை எடுத்துள்ளது. அமெரிக்காவுடனான ராணுவ மற்றும் உளவுத்துறை ஒத்துழைப்பை தற்காலிகமாக முறிப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குர்ரம் தஸ்ட்கிர் அறிவித்துள்ளார். பாகிஸ்தான், அமெரிக்கா மோதல் இந்தியாவும் அமெரிக்காவும் உறவை இன்னும் வலுப்படுத்த உதவுமென்று அரசியல் நோக்கர்கள் குறிப்பிடுகிறார்கள்.