‘எச் – 1 பி விசா வைத்துள்ளோரை, நாட்டை விட்டு வெளியேறும்படி, நிர்ப்பந்திக்கும் திட்டமில்லை’ என்ற, அதிபர், டொனால்டு டிரம்ப் அரசின் அறிவிப்புக்கு, அமெரிக்க வாழ் இந்தியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் பணியாற்ற, வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும், எச் – 1பி விசாக்களை நிறுத்தப் போவதாகவும், அமெரிக்க குடியுரிமை அளிக்கும், ‘கிரீன் கார்டு’க்காக காத்திருப்போர், அவர்களின் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவர் என்றும், அதிபர் டிரம்ப் அறிவித்தார்.இதையடுத்து, அமெரிக்காவில் பணியாற்றி வரும், 7.50 லட்சம் இந்தியர்கள், அங்கிருந்து வெளியேறும் அபாயம் ஏற்பட்டது. இதனால், அவர்கள் பீதி அடைந்தனர்.
இந்நிலையில், ‘எச் – 1பி விசா வைத்திருப்போரை, நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கும் திட்டமில்லை’ என, அமெரிக்க குடியுரிமை நிறுவனம், நேற்று முன்தினம் அறிவித்தது.
இது குறித்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, அமெரிக்க, எம்.பி., ராஜா கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: இந்த அறிவிப்பு, அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில், பெரும் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த அதிரடியான அறிவிப்பு, அமெரிக்க சந்தையிலும், பொருளாதாரத்திலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும். எங்கள் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்த, டிரம்ப் அரசுக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.