‘ஆன்மிகத்தால் விவசாயம் வளரும்; விவசாயிகளின் வருமானம் உயரும். அதனால், பள்ளிகளில் ஆன்மிகம் தொடர்பான வகுப்புகளை கட்டாயமாக்க வேண்டும்’ என, உ.பி.,யைச் சேர்ந்த, பா.ஜ., – எம்.பி., வீரேந்திர சிங் மஸ்த், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சருக்குகடிதம் எழுதி உள்ளார்.
உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., அரசு அமைந்துள்ளது.
அமைச்சருக்கு கடிதம்
மாநிலத்தின், பதாய் லோக்சபா தொகுதி, எம்.பி.,யான, வீரேந்திர சிங் மஸ்த், பாரதிய க்ருஷி மோர்ச்சாவின் தலைவராகவும் உள்ளார். இவர், சமீபத்தில், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகருக்கு எழுதியுள்ள கடிதம்:விவசாயிகளின் வருவாயை, 2022க்குள் இரட்டிப்பாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடி உள்ளார்.
விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்களை கற்றுத் தருவதுடன், நம் பாரம்பரியம், கலாசாரம், பூஜை முறைகள், ஆன்மிகம் தொடர்பாகவும் கற்றுத் தர வேண்டும். ஆன்மிகத்துக்கும், விவசாயத்துக்கும் நேரடி தொடர்பு உள்ளது.
பல்வேறு விழாக்கள், பண்டிகைகளுக்கு பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும், விவசாயம் மூலமே கிடைக்கின்றன. அதனால், ஆன்மிகம், சமஸ்கிருதத்தை விவசாயிகள் கற்றுக் கொண்டால், விவசாயம் வளர்ச்சி அடையும். மேலும், அது வேலைவாய்ப்பையும் உருவாக்குகிறது.
சத்சங் பவன்
இதற்காக என் தொகுதியில், ஆன்மிகம் தொடர்பான பாடங்களை நடத்துவதற்கான, சத்சங் பவன் துவக்க உள்ளேன். மகர சங்கராந்தி தினமான, 14 முதல், இது செயல்படும். இது தவிர, என் தொகுதிக்குட்பட்ட, 10 இடங்களில், இது போன்ற பள்ளிகளை துவக்க உள்ளேன். இதற்காக, எம்.பி., தொகுதி நிதியில் இருந்து, ஒரு கோடி ரூபாயை ஒதுக்க உள்ளேன்.
விவசாயத்தின் வளர்ச்சி மற்றும் விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு, பள்ளிகளில், ஆன்மிகம், சமஸ்கிருதத்தை கட்டாயமாக்க வேண்டும். நாடு முழுவதும், இதை செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.