கிரிக்கெட் போட்டிகளில் அதிக பேட்டிங் சராசரி வைத்திருந்தவர் என்ற ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டான் பிராட்மேனின் சாதனையை ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த 18 வயது வீரர் முறியடித்துள்ளார்.
ஆஃப்கானிஸ்தான் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ஸ்பீன்கர் பகுதி அணிக்காக விளையாடி வருபவர் பஹீர்ஷா மெஹ்பூப். கடந்த 2017 சீசனில் அறிமுகமான 18 வயது வீரரான பஹீர்ஷா, இதுவரை 7 முதல்தர போட்டிகளில் (12 இன்னிங்ஸ்கள்) 1,096 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். ஆமோ ரீஜன் அணிக்கெதிரான போட்டியில் அறிமுகமான அவர், முதல் போட்டியிலேயே 256 ரன்கள் குவித்தார். உலக அளவில் அறிமுகப் போட்டியில் வீரர் ஒருவர் குவித்த அதிக ரன்கள் பட்டியலில் இது இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. அறிமுகப் போட்டியில் 260 ரன்கள் குவித்து முதலிடத்தில் இருப்பது மும்பை வீரர் அமோல் மஜூம்தார். அதேபோல், இளம்வயதில் முச்சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் பாகிஸ்தானின் ஜாவேத் மியாண்டடுக்கு அடுத்தபடியாக பஹீர்ஷா இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளார்.
இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், பஹீர்ஷாவின் பேட்டிங் சராசரி 121.77. இது, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டான் பிராட்மேனின் சராசரியை விட அதிகம். பிராட்மேனின் பேட்டிங் சராசரி 95.14 ஆகும். இதன்மூலம் உலக அளவில் முதல்தர போட்டிகளில் ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்த வீரர்களில் பேட்டிங் சராசரி அதிகம் வைத்திருக்கும் வீரர் என்ற சாதனையை ஆஃப்கானிஸ்தான் இளம் வீரர் பஹீர்ஷா படைத்துள்ளார். நியூசிலாந்தில் விரைவில் தொடங்க உள்ள ஜூனியர் உலகக் கோப்பை தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணியிலும் அவர் இடம்பிடித்துள்ளதால், அந்த அணி மீதான எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறிக் கிடக்கிறது.